6 மாதங்களில் நிலைப்பாட்டை மாற்றிய இந்தியா! இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பு
ஜெனீவா: காசாவில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தொடர்கிறது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவில் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தும் தீர்மானம் ஐநா சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதேநேரம் இந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துவிட்டது.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை நடத்தி வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பல முக்கிய ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் பல ஆண்டுகளாகத் தாக்குதல் தொடரும் நிலையில், இதனால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நான்காவது தீர்மானம்
இதற்கிடையே காசாவில் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தும் தீர்மானம் ஐநா சபையில் கொண்டு வரப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் இதுபோல கொண்டு வரப்படும் நான்காவது தீர்மானம் இதுவாகும். இந்த தீர்மானத்திற்கு மொத்தம் 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அதேநேரம் இந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துவிட்டது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 55,000 பேர் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது.
வாக்களிக்காமல் புறக்கணித்த இந்தியா
இதற்கு முன்பு, கடந்த டிசம்பர் மாதம் தான் காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா. சபையின் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவே இந்தியா வாக்களித்தது. ஆனால், இப்போது ஆறு மாதங்களில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாரீஸில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பாரோட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நேரத்தில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது. அங்கு இஸ்ரேல்- பாலஸ்தீனம் என இரு நாடுகளை உருவாக்கி பிரச்சினைக்குத் தீர்வை கொண்டு வருவது தொடர்பான மாநாட்டை பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியா இணைந்து நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளுமா என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை. இந்தச் சூழலில் தான் இந்தியா இப்படியொரு முடிவை எடுத்துள்ளது.
பாலஸ்தீனம்
அதேநேர் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கக் கூடாது என்று டிரம்ப் நிர்வாகம் நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்தியா 1988ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனத்தை அங்கீகரித்தது. ஐ.நா. பொதுச் சபையில் உள்ள 193 நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை ஏற்கனவே அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீர்மானம் நிறைவேறியது
இப்போது ஐநாவில் ஸ்பெயின் தான் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்திருந்தது. இந்த தீர்மானத்திற்கு ஐந்தில் நான்கு பங்கு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. "பொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்" என்ற இந்த தீர்மானத்திற்கு 180 நாடுகளில் 149 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
இந்தியா, அல்பேனியா, டொமினிக்கா, ஈக்வடார், கிர்பாஸ், மலாவி உள்ளிட்ட 19 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. பிரிக்ஸ் அல்லது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியா மட்டுமே வாக்களிக்காமல் புறக்கணித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பத்து நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.
இந்தியா விளக்கம்
இந்தியாவின் இந்த நிலைப்பாடு குறித்த ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பராவதனனேனி ஹரீஷ் விளக்கமளித்தார். காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நெருங்கி வர வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றார். மேலும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் அமைதி பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.












Click it and Unblock the Notifications