மீண்டும் நட்பாகும் இந்தியா - வங்கதேசம்.. தாரிக் ரஹ்மான் போடும் பிளான்.. மோடிக்கு வரும் அழைப்பு
டாக்கா: இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு வரலாற்றில் இல்லாத வகையில் மோசமாகி உள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில் தான் வங்கதேசத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பின்பி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை அழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. கடந்த 2025 ஆகஸ்ட் 5ம் தேதி வங்கதேச பிரதமராக அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசுக்கு பதில் மக்களால் தேர்வு செய்யப்படும் அரசு ஆட்சி நடத்தும் வகையில் இந்த தேர்தல் நடந்தது.
இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சியும், ஷபிஹூர் ரஹ்மானின் ஜேஇஐ எனும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிகள் இடையே தான் போட்டி நிலவியது. இதில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றது.
மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 151 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்தார். இதனால் 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி 208 தொகுதிகளிலும், அவரது கூட்டணி கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன.
அதேவேளையில் ஜமாத் இ இஸ்லாமி மற்றும் அதன் கூட்டணி மொத்தம் 77 இடங்களில் வெற்றி பெற்றன. இதில் ஜமாத் இ இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றது. ஹசீனாவின் ஆட்சியை கலைத்த மாணவர்களின் என்சிபி கட்சி 6 இடங்களில் வகை சூடின. இதனால் பெரும்பான்மை பலத்துடன் பிஎன்பி கட்சியின் தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் தான் தாரிக் ரஹ்மானை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛தாரிக் ரஹ்மானுடன் உரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். வங்கதேச தேர்தலில் அவர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அதற்கு வாழ்த்து தெரிவித்தேன். வங்கதேச மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தேன்'' என்று கூறியுள்ளதோடு அந்த பதிவில் தாரிக் ரஹ்மானையும் டேக் செய்திருந்தார்.
இருநாடுகள் இடையே மோதல் உள்ள நிலையில் தலைவர்களின் இந்த உரையாடல் பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்திய பிரதமர் மோடியை, தாரிக் ரஹ்மான் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைக்க திட்டமிட்டுள்ளார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு மீண்டும் வலுவாக வாய்ப்புள்ளது.
முன்னதாக, வங்கதேச பிரதமராக அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தவரை இந்தியா - வங்கதேச உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த 2024ல் வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டார்.
முகமது யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தது தான் முக்கிய காரணம். அதுமட்டுமின்றி அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. உயிருடன் எரித்து கொல்லப்பட்டதோடு, அடித்தும் கொலை செய்யப்பட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை பிரிப்போம் என்று திமிராக வங்கதேசம் பேசியது.
மேலும் பாகிஸ்தானுடன் சேர்ந்து எல்லையில் சீண்டியது. இது இருநாடுகள் இடையேயான உறவை பலவீனமாக்கியது. இதற்கு நம் நாடும் பதிலடி கொடுத்தது. வங்கதேசத்தின் வர்த்தகத்துக்காக நம் நாட்டின் விமான நிலையம், துறைமுகத்தை பயன்படுத்துவதற்கான அனுமதி அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதோடு வங்கதேசத்தின் வளர்ச்சிக்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் மானிய அடிப்படையிலான நிதியை குறைத்தது. இப்படியான சூழலில் தாரிக் ரஹ்மான் - மோடி இடையேயான புதிய நட்பு இது இருநாடுகள் இடையே சீர்குலைந்துள்ள உறவை மீட்டெடுக்கும் முதல் படியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications