காலையிலேயே அதிர்ச்சி! முதலீட்டாளர்களுக்கு பல ஆயிரம் கோடி போச்சு! மொத்தமாக சரிந்த இந்திய பங்குச்சந்தை
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், அது இந்தியப் பங்குச்சந்தைகளில் நேரடியாக எதிரொலித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டுமே கடுமையான சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மத்திய கிழக்கில் கடந்த சனிக்கிழமை முதலே போர் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானைத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் அதற்குப் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமாகி வருகிறது.

இதற்கிடையே மத்திய கிழக்கு போர் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1100 சரிந்து, 80,277ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 300 சரிந்து, 24,890 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் 12% வரை உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிலும் கூட பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து இருக்கிறது.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 24 பைசா சரிந்து, 91.32 என்ற மோசமான நிலையில் இருக்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றமே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
அதேநேரம் தங்கம் விலை இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாகத் தங்கம் விலை இன்று உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தியாவில் நேற்றைய தினமே தங்கம் விலை உயர்ந்து இருந்தது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை அந்தளவுக்கு உயராத நிலையில், இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளது.
இன்றைய தினம் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து, ரூ.15,660 விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280 விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications