ஹமாஸ் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்! போர் பதற்றம்! இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் நிலை என்ன?
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பு நடத்திய கண்மூடித்தனமான தாக்குதால் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் நிலை என்னானது என்ற கேள்வியும், கவலையும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு இஸ்ரேல் வாழ் இந்தியர்கள் அளித்துள்ள பேட்டியில், தாங்கள் இஸ்ரேலில் மிகவும் பாதுகாப்பாக உள்ளோம் என்றும் எல்லோரும் நினைப்பது போல் பயப்பட ஒன்றுமில்லை எனவும் நற்தகவலை தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தப்பிக்கவும், குண்டு மழையிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் பூமிக்கு அடியில் தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு தான் பாதுகாப்புடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தங்களை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு மெசேஜ் சொல்லியுள்ளனர்.
பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் தாக்குதலை வான்வெளியில் வைத்தே முறியடிக்கும் பணிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் செய்தித் தொலைக்காட்சிக்கு தெரிவித்து சில மணி நேரங்கள் ஆகிவிட்டதால் இஸ்ரேலின் தற்போதைய நிலைமை சற்று உக்கிரமடைந்திருப்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி இந்தியாவின் ஆதரவை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி தேவையான உதவிகளை செய்யவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இதனிடையே இஸ்ரேலின் நகரங்களுக்குள் நுழைய பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையேயான பிரச்சனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒன்றாகும். இந்தச் சூழலில் தான் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். ரிசர்வ் படைகளை களமிறக்கியுள்ள இஸ்ரேல் பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேல் வாழ் இந்தியர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications