நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவது உலக முஸ்லிம்களையே இழிவுபடுத்துவதாகும் - ஆஸ்திரேலிய இமாம்கள் சபை
கான்பெரா: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவது உலக முஸ்லிம்களையே இழிவுபடுத்துவதாகும் என பாஜக செய்தித் தொடர்பாள நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆஸ்திரேலிய இமாம்கள் சபை தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளது.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதுகுறித்து மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, "நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பதிவு செய்வோம்." என்றார்.

உத்தரப்பிரதேசத்தில் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

இஸ்லாமிய நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய இமாம்கள் சபை
இதுகுறித்து ஆஸ்திரேலிய தேசிய இமாம்கள் சபை வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நபிகள் நாயகம் குறித்த நுபுர் ஷர்மாவின் கருத்து கடுமையாக காயப்படுத்தியுள்ளது. இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும், அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை பொதுவெளியில் கூறுவது சமூகத்தில் நஞ்சை விதைப்பதாகும். உலகம் முழுவதும் உள்ள 190 கோடி இஸ்லாமியர்களில் 20 கோடி பேர் இந்தியாவில் வசிக்கிறார்கள். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவது உலக முஸ்லிம்களையே இழிவுபடுத்துவதாகும்." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications