ஹிஜாப் இன்றி ஐஸ்கிரீம் சுவைத்த பெண்! விளம்பரத்தில் நடிக்க ஈரானில் பெண்களுக்கு விழுந்த தடை!
டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஐஸ்கிரீம் சுவைத்த பெண்ணால் அந்நாட்டில் விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பொதுவெளியல் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாய நடைமுறையாக உள்ளது. இதற்கு அங்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதாவது பொது இடத்தில் ஹிஜாபை அகற்றி எதிர்ப்பை வெளிக்காட்டுவதோடு, சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவர்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்கு எதிரான பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

ஐஸ்கிரீம் விளம்பரம்
இந்த பிரச்சனைக்கு மத்தியில் தான் தற்போது ஈரானில் ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'டோமினோ' எனும் நிறுவனம் வெளியிட்ட ஐஸ்கிரீம் விளம்பரம் தற்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. அதாவது பெண் ஒருவர் தளர்வான உடை அணிந்து ஹிஜாப்பால் முகத்தை மூடாமல் காரில் செல்வதோடு, பசுமை நிறைந்த பகுதியில் காரை நிறுத்தி ஐஸ்கிரீமை கடித்து சுவைக்கும் வகையில் அந்த விளம்பரம் உள்ளது. மேலும் ஐஸ்கிரீமின் சுவையை வெளிப்படுத்தும் வகையில் அவர் முகபாவனை செய்கிறார். இன்னொரு விளம்பரத்தில் ஐஸ்கிரீம் நிறத்துக்கு ஏற்ப உடையின் நிறம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதகுருக்கள் எதிர்ப்பு
ஈரானில் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறை உள்ள நிலையில் தான் இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதகுருக்கள் விமர்சனம் செய்ததோடு, இந்த விளம்பர நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் ஐஸ்கிரீம் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர சிலர் முடிவு செய்துள்ளனர்.

விளம்பரத்தில் பெண்களுக்கு தடை
இதையடுத்து ஐஸ்கிரீம் விளம்பரம் ஈரான் மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும், பெண்களை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாகவும் ஈரான் அரசு கூறியது. அதோடு ஈரானில் விளம்பரத்தில் நடிக்க பெண்களுக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர் ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனி அனுமதியில்லை
அதில், ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளை அவமதித்த காரணத்தால் பெண்கள் இனி விளம்பரங்களில் நடிக்க அனுமதியில்லை. இது கலாச்சார புரட்சியின் உச்சபட்ச கவுன்சிலின் தீர்ப்புக்கு உட்பட்டதோடு, வர்த்தக விளம்பரங்கள் தொடர்பான ஈரான் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் இந்த தடை பொருந்தும்'' என கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியாகி உள்ள விளம்பரத்தை நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications