உலக நாடுகளிலேயே இந்தியா தான் மிக மோசமாக பாதிக்கப்படும்.. ஈரான் vs அமெரிக்காவால் இக்கட்டான நிலை
துபாய்: இந்தியாவை பொறுத்தவரை எந்த நாட்டுடனும் வலிய சண்டைக்கு போகாது. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் ஒரு போதும் தலையிடாது. ராணுவம் என்பது தனது தற்காப்பிற்கு மட்டும் தான் என்ற கொள்கையை வைத்துள்ளது. தற்போது இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதலில் யார் பக்கம் நிற்பது என்ற தர்ம சங்கடமான நிலையில் இந்தியா இருக்கிறது. ஈரான் வளைகுடா நாடுகளை தாக்க தொடங்கி உள்ளது. ஒருவேளை மத்திய கிழக்கில் போர் மூண்டால், உலக நாடுகளிலேயே இந்தியா தான் மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கும். இதற்கான காரணங்களை பார்ப்போம்
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80%-க்கும் அதிகமானவற்றை இறக்குமதி செய்து வரகிறது. இதில் பெரும் பகுதி ஈராக், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகமாக வருகிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதால் குறைந்தவிலையில் கச்சா பெறுவது நின்றுவிட்டது. அமெரிக்கா சொல்வது தான் விலை என்கிற நிலையில் தான் உலகம் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
தற்போது அமெரிக்க தான் போரை தொடங்கி உள்ளது. பொதுவாக அரபு நாடுகளில் போர் ஏற்பட்டால் எண்ணெய் விலை விண்ணைத் தொடும். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிரடியாக உயர்த்தும்.
அத்துடன் ஈரான் ஹார்முஸ் நீர்சந்தியை மூடியிருப்பதால். இந்தியாவிற்கு வரும் எண்ணெய் கப்பல்கள் அனைத்தும் நின்றுவிடும் அபாயம் இருக்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் துறையை முடக்கும் நிலை ஏற்படும்
புலம்பெயர் இந்தியர்களின் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். போர் வெடித்தால், இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வருவது இந்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் (ஏற்கனவே குவைத் மற்றும் உக்ரைன் போர்களின் போது இந்தியா இதைச் செய்தது, ஆனால் இது இன்னும் அதிக அளவில்செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அரபு நாடுகளில் இருந்து இந்தியார்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் (Remittances) இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் பெரிய பலம். போர் ஏற்பட்டால் அந்த வருவாய் நின்றுவிடும் அபாயம் உள்ளது. பல இந்தியர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து பாதிப்பை சந்திக்கும் அபாயம் ஏற்படும்.
சாபஹார் துறைமுகம் மற்றும் வர்த்தகம்
இந்தியா ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் பெரும் முதலீடு செய்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு முக்கியமானது. போர் ஏற்பட்டால் இந்த முதலீடுகள் அனைத்தும் போரால் வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது.
ராஜதந்திர நெருக்கடி
இந்தியாவுக்கு இஸ்ரேல் ஒரு முக்கியமான ராணுவக் கூட்டாளி; அதே சமயம் ஈரான் ஒரு நீண்டகால நண்பன் மற்றும் எரிசக்தி வழங்கி வருகிறது. ஒரு பக்கம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அழுத்தம் கொடுக்கும், மறுபக்கம் ஈரானுடனான உறவை இழக்க முடியாது. இருதரப்பிற்கும் இடையில் இந்தியா சிக்கி தவிக்கிறது. தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார போர்
ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், மற்ற நாடுகளுக்கு இது ஒரு "அரசியல் போர்" என்றால், இந்தியாவிற்கு இது ஒரு "பொருளாதாரப் போர்" ஆகிவிடும். இந்தியா இப்போதுதான் வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரம் என்பதால், இத்தகைய ஒரு மோதல் இந்தியாவின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளிவிடும் அபாயம் உள்ளது. அதனால்தான் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இந்த விவகாரத்தில் "அமைதி பேச்சுவார்த்தை" மூலம் தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தியா இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications