ஒரே டிக்கெட்டில் மொத்தமாக மாறிய வாழ்க்கை.. 2 ஆயிரம் கோடியை லாட்டரியில் வென்ற அதிர்ஷ்டசாலி
லண்டன்: லாட்டரி டிக்கெட் வாங்கும் பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சினாலும், ஒருசிலருக்கு வாழ்க்கையையே திருப்பி போட்டு விடுகிறது. அப்படித்தான் ஒரே ஒரு லாட்டரி டிக்கெட்டில் ஒருவருக்கு வாழ்க்கை மொத்தமாக மாறியிருக்கிறது. அதுவும் பரிசு ஒரு கோடி இல்லை.. இரண்டு கோடி இல்லை.. மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ.2,120 கோடி பரிசாக அடித்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. வாழ்க்கையில் ஒருநாளாவது நமக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடாதா? என கனவுக்கோட்டை கட்டும் பலரும் லாட்டரியை வாங்கி முயற்சித்து பார்ப்பதுண்டு. இதில் பெரும்பாலானோருக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் ஒரு சிலருக்கு லாட்டரியில் பம்பர் பரிசு அடித்து மொத்த வாழ்க்கையும் ஒரே நாளில் புரட்டி போட்டு விடும்.

யூரோ மில்லியன்ஸ் லாட்டரி
இப்படியான சம்பவம்தான் ஐரோப்பா லாட்டரியில் ஒருவருக்கு நடந்துள்ளது. அதிலும் லாட்டரியில் பரிசாக விழுந்த தொகையை கேட்டால் ஒரு நிமிடம் தலை சுற்றி போவார்கள். ஒரு கோடி, இரண்டு கோடி இல்லை.. இந்திய மதிப்பில் சுமார் 2,120 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது. பகல் கனவில் கூட இவ்வளவு தொகை பரிசாக கிடைக்கும் என நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பம்பர் பரிசு அடித்துள்ளது அயர்லாந்தில் உள்ள ஒரு அதிர்ஷ்டசாலிக்கு.. இது பற்றிய விவரம் வருமாறு:-
ஐரோப்பிய நாடுகளில் யூரோ மில்லியன்ஸ் லாட்டரிகள் மிக பிரபலம். பல கோடி ரூபாய் முதல் பரிசுத்தொகை கிடைக்கும் என்பதால் இந்த லாட்டரிகளில் சரியான எண்ணை சேர்த்து பலரும் விளையாடுகிறார்கள். அந்த வகையில்தான் யூரொ மில்லியன் லாட்டரியில் 13, 22, 23, 44, 49 மற்றும் லக்கி ஸ்டார்களாக 03, 05 என்ற எண் வரிசை கொண்ட டிக்கெட்டிற்கு யூரோ மில்லியன் டிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொகை பரிசாக அடித்துள்ளது.
அயர்லாந்தில் விற்கப்பட்ட டிக்கெட்
இந்த டிக்கெட் அயர்லாந்தில் கடையில் வாங்கப்பட்டதாம்.. ஆன்லைனில் வாங்கப்பட்ட டிக்கெட் இல்லை என்பதை யூரோ மில்லியன் லாட்டரி அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடி வென்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னமும் தெரியவில்லை. என்வே டிக்கெட் வாங்கியவர்கள் உடனே தங்கள் எண்ணை சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இரண்டு வாரங்களாக யாரும் இதுவரை பரிசுத்தொகையை உரிமை கோரவில்லை. இந்த பரிசுத்தொகை உரிமை கோரப்பட்டால் யூரோ மில்லியன் லாட்டரியில் இதுவரை வைத்த ரெக்கார்டுகளை முறியடித்து, இதுதான் அதிகபட்ச தொகையாக இருக்குமாம். இவ்வளவு பெரிய தொகையை வென்ற அதிர்ஷ்டசாலி பாப் ஸ்டார் துபா லிபாவைவிட அதிக சொத்துக்ளுடன் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க போகிறார்.
டிக்கெட்டை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்
அயர்லாந்து நேஷனல் லாட்டரி நிர்வாகி சியான் முர்பி இது குறித்து கூறுகையில், "எங்களிடம் டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் எண்ணை ஒருமுறை பரிசோதிக்குமாறு அறிவுறுத்துகிறோம். ஒருவேளை நீங்கள் வெற்றியாளர் என தெரியவந்தால் உடனடியாக டிக்கெட்டின் பின்புறம் உங்கள் கையெழுத்தை போட்டுவிட்டு அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நேஷனல் லாட்டரி தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் போதும்.
பரிசுத்தொகையை எப்படி பெறுவது என்ற வழிகாட்டுதலை நாங்களே கொடுப்போம். மிகப்பெரிய தொகை என்பதால், சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியுள்ளது. எனினும், வெற்றி பெற்ற இடத்தை நாங்கள் தெரிவிப்போம். மிகப்பெரிய தொகை என்பதால், பரிசு அடித்த அதிர்ஷ்டசாலி கொஞ்சம் இன்ப அதிர்ச்சியில் இருப்பார். அவர்களை பொறுமையுடன் இருக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம். எனவே தனிப்பட்ட முறையில் சட்ட அறிவுரையும், நிதி அறிவுரையும் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications