டிரோன்களை அனுப்பி வேட்டையாடிய இஸ்ரேல்.. 8 பாலஸ்தீனியர்கள் பலி.. பலர் படுகாயம்! மிகப்பெரிய அட்டாக்!
ஜெருசலேம்: பாலஸ்தீன முகாமை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நள்ளிரவில் நடத்திய டிரோன் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன் மீது நடத்திய மிகப்பெரிய ராணுவ தாக்குதல் இது எனக் கூறப்படுகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனம் காசாமுனை மற்றும் மேற்குக்கரை என இரு பகுதிகளாக உள்ளது. இதில் காசாமுனை பகுதியானது ஹமாஸ் அமைப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது. மேற்குகரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார்.

மேற்குக் கரையின் சில பகுதிகள் இஸ்ரேல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பாலஸ்தீனத்தின் பல்வேறு போராளி குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களை இஸ்ரேல் அரசு, பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. எனவே இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக்கரையின் ஜெனின் நகரில் போராளி குழுக்கள் சிலர் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன்பேரில் இஸ்ரேல் ராணுவத்தினர் முகாம்கள் மீது நள்ளிரவு டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் தாக்குதல் நடைபெற்ற அந்த தெருக்களில் கரும்புகை எழுந்ததாகவும், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவம் சுமார் பத்து முறை தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனர்களின் ஏராளான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் ஆயுதம் ஏந்தாத அப்பாவி மக்களை தாக்குகிறார்கள். ஆம்புலன்ஸ்களை தாக்குகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் கூறுகையில், இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனிய போராளி குழுக்கள் சதித்திட்டம் தீட்டுவதாக தகவல் கிடைத்தது. எனவே போராளி குழுக்களை ஒழித்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது' எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக பாலஸ்தீன அதிபர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து பாலஸ்தீன மக்கள் மண்டியிட மாட்டார்கள். இதனை எதிர்கொண்டு உறுதியாக நிற்பார்கள்' எனக் கூறப்பட்டுள்ளது. முகாமை அழித்து, மக்களை வெளியேற்றவே இந்த தாக்குதல் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாலத்தீன பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாமில் தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறி, இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலுக்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்ன்னர், ஜெனின் நகர அகதிகள் முகாமில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர். இந்நிலையில், தற்போது நடைபெற்ற தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளதும், பலர் படுகாயமடைந்துள்ளதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டாவது பாலஸ்தீன கிளர்ச்சியை அடக்குவதற்காக மேற்குக்கரை பகுதிக்குள் ஏராளமான இஸ்ரேல் படையினர் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதற்கு அடுத்தபடியாக அந்தப் பகுதியில் இஸ்ரேல் நடத்தியுள்ள மிக்கபெரிய ராணுவ நடவடிக்கை இது எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications