ஈரான் vs இஸ்ரேல்.. எந்த நாட்டின் ராணுவ பலம் பெரியது? முழு விவரம் இதோ!
தெஹ்ரான்: ஏறத்தாழ கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல்-ஈரான் மாறி மாறி தாக்கி வருகின்றன. இந்நிலையில் இரு நாடுகளில் எந்த நாட்டிடம் அதிக ராணுவ பலம் இருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் - இஸ்ரேல் ராணுவ பலம்
ஈரானின் மக்கள் தொகை இஸ்ரேலை விட பத்து மடங்கு அதிகம். குளோபல் ஃபயர் பவர் அமைப்பின் 2024ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், ஈரானின் மக்கள் தொகை 8.75 கோடி ஆகும். இஸ்ரேலின் மக்கள் தொகை வெறும் 90.43 லட்சம்தான். இதனால், ஈரான் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. ஈரானிய ராணுவம் மேற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது. சுமார் 5.80 லட்சம் வீரர்கள் அந்நாட்டு ராணுவத்தில் இருக்கின்றனர். ரிசர்வ் படையினர் மட்டும் 2 லட்சம் பேர் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
இஸ்ரேலில் 1,69,500 ராணுவ வீரர்கள் உள்ளனர். 4,65,000 ரிசர்வ் படைகளும், 8,000 துணை ராணுவப் படை வீரர்களும் உள்ளனர். என்னதான் ஈரான் அதிக ராணுவ வீரர்களை கொண்டிருந்தாலும், இஸ்ரேல்தான் ராணுவத்திற்காக அதிக செலவு செய்கிறது. குளோபல் ஃபயர் பவர் இன்டெக்ஸ் படி, இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் 24 பில்லியன் டாலர்கள். ஈரானின் பட்ஜெட் 9.95 பில்லியன் டாலர்கள் மட்டும்தான்.
ஈரானின் ராணுவ அமைப்பும், அதற்கான நிதி உதவியும் கொஞ்சம் வித்தியாசமானது. குறிப்பாக அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அரசாங்க பட்ஜெட்டை மட்டும் சார்ந்து இல்லை. ஈரான் பங்குச் சந்தை நிறுவனங்களின், சந்தை மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கை ராணுவம் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களையும் ராணுவம் வைத்துள்ளது. இதன் மூலம் ராணுவத்திற்கு வருவாய் கிடைக்கிறது. IRGC ஈரானின் கள்ளச் சந்தையின் ஒரு பகுதியை கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்காவின் ஃபவுண்டேஷன் ஃபார் டிஃபன்ஸ் ஆஃப் டெமாக்ரஸிஸ் (FDD) கூறியுள்ளது.
ஆயுத பலம் யாருக்கு அதிகம்?
ஆள்பலத்தை பொறுத்தவரை ஈரான் இஸ்ரேலை விட அதிகமாக இருந்தாலும், ஆயுத பலத்தில் இஸ்ரேல் முன்னிலையில் உள்ளது. இஸ்ரேலிடம் 612 விமானங்களும், ஈரானிடம் 551 விமானங்களும் உள்ளன. இஸ்ரேலின் விமானப் படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன. ஆனால் ஈரானில் அவ்வாறு இல்லை. இஸ்ரேலிடம் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. ஆனால் ஈரானின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியம் மிக பெரியது. ஈரானிடம் 2,000 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் உள்ளன. இவை இஸ்ரேலை சல்லி சல்லியாக துளைத்து எடுக்கும்.
ஈரான் ராணுவ அணிவகுப்புகளின்போது தனது ஏவுகணைகளை காட்சிப்படுத்துகிறது. மேலும், ட்ரோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஈரானின் ட்ரோன்கள், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவால் பயன்படுத்தப்படுகின்றன. சூடானிலும் பயன்படுத்தப்பட்டன.
தரை வழி தாக்குதல்கள்
தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேலிடம் 1,370 டாங்குகளும், ஈரானிடம் 1,996 டாங்குகளும் உள்ளன. என்னதான் ஈரான் அதிக டாங்குகளை வைத்திருந்தாலும் அவையெல்லாம் பழையது. இஸ்ரேலிடம் மெர்கவா டாங்கிகள் உள்ளன. இது உலகின் சிறந்த வடிவமைக்கப்பட்ட மற்றும் அதிக கவச டாங்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே கடற்படை பலத்தில் பெரிய அளவில் இல்லை. ஈரானிடம் 101 கப்பல்களும், இஸ்ரேலிடம் 67 கப்பல்களும் உள்ளன. ஈரானிடம் 19 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. இஸ்ரேலிடம் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
அணு ஆயுத பலம்
அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, இஸ்ரேல் முன்னிலையில் உள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையின்படி, இஸ்ரேலிடம் சுமார் 80 அணு ஆயுதங்கள் உள்ளன. இதில் சுமார் 30 விமானத்தில் இருந்து வீசக்கூடிய குண்டுகள். மீதமுள்ள 50 ஜெரிகோ II ஏவுகணைகளில் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஜெருசலேமின் கிழக்கே உள்ள ஒரு இராணுவ தளத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது.
ஈரானின் பிரதிநிதி படைகள்
ஈரானின் மிகப்பெரிய ராணுவ பலம், அதன் பிரதிநிதிக்குழுக்கள்தான். உதாரணமாக இஸ்ரேலை தாக்க ஈரான் நேரடியாக களமிறங்கவில்லை. மாறாக ஹிஸ்புல்லா படைகளை அனுப்பியது. இஸ்புல்லா ஈரானின் ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்களாகும். லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி, சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள துணை ராணுவக் குழுக்கள், காசாவில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் என, மேற்கு ஆசியா முழுவதும் தங்களது பிரதிநிதிகள் படைகளை ஈரான் வைத்திருக்கிறது.
இந்த படைகள் ஈரானின் ஆயுதப் படைகளின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், அவை போருக்குத் தயாராக உள்ளன. மேலும் ஈரானுக்கு விசுவாசமாக இருப்பதாகவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் உதவிக்கு வருவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த பிரதிநிதிகள் படைகள்தான். ஈரானிய ஆயுதக் களஞ்சியத்தில் மிகவும் மதிப்புமிக்க கருவியாகும். இந்த குழுக்கள் மேம்பட்ட ஆயுதங்களுடன் பயிற்சி பெற்றிருக்கிறது. இந்த நெட்வொர்க் லெபனான் முதல் பாகிஸ்தான் வரை பரவியுள்ளது. ஈரானை அமெரிக்கா நேரடியாக தாக்காமல் இருப்பதற்கு இந்த படைகளும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications