ஓமனை தாக்கப்போகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு.. டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. பின்னணி
ஜெருசலேம்: அமெரிக்காவும், இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடாக உள்ளன. அதேபோல் அமெரிக்காவும், ஓமனும் நெருங்கிய நட்பு நாடாக இருக்கின்றன. இப்படியான சூழலில் தான் ஓமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. இதனால் தான் பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்த போருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. இந்த போர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டு இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்தி போரை முடித்து வைத்தார்.

இஸ்ரேல் உடன் அமெரிக்காவுக்கு இருக்கும் பந்தம் தான் இந்த போர் நிறுத்தத்துக்கு உதவியதும். அதேபோல் அமெரிக்காவுக்கும், அரபு நாடுகள் இடையே நல்ல உறவு இருக்கிறது. மாறாக இஸ்ரேல், அரபு நாடுகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் அமெரிக்கா தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான உறவை சுமூகமாக்க முயற்சித்து வருகிறது.
ஆனால் அது இன்று வரை சாத்தியமாகவில்லை. இதற்கிடையே தான் கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல், கத்தார் தலைநகர் தோஹாவில் தாக்குதல் நடத்தியது. தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பதுங்கி இருந்ததை அறிந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா (Khalil Al-Hayya) என்பவர் தோஹாவில் பதுங்கியுள்ள நிலையில் அவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கலில் அல் ஹயா தப்பினார். இருப்பினும் அவரது மகன் ஹமாம் அல் ஹயா, அவரது அலுவலக இயக்குநராக செயல்பட்டு வந்த ஜிகாத் லுபத், 3 பாதுகாவலர்கள், ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது இஸ்ரேல் - கத்தார் மட்டுமின்றி அரபு நாடுகள் இடையேயான விரிசலை இன்னும் அதிகப்படுத்தியது. அதன்பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையிட்டு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கத்தாரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்ப் கொடுத்த அழுத்தம் காரணமாக தொலைபேசியில் கத்தார் பிரதமர் செய்க் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானியை தொடர்பு கொண்டு தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இப்படியான சூழலில் தான் தற்போது இஸ்ரேல், ஓமன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்துள்ளன. அதாவது ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இப்படியான சூழலில் ஏமனின் ஹவுதிகளுக்கு ஓமன் அடைக்கலம் கொடுக்கிறது. இதனால் இஸ்ரேல் கடும் கோபத்தில் உள்ளது. இதனால் ஓமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டம் போடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது கத்தாரில் பதுங்கிய ஹமாஸ் அமைப்பினரை தாக்கியது போல் ஓமனில் உள்ள தங்களின் எதிரியான ஹவுதிகளை தாக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஓமனும், இஸ்ரேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் இஸ்ரேல், ஓமனை தாக்கும்போது அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறும்.
அதுமட்டுமின்றி கடந்த செப்டம்பரில் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அனைத்து அரபு நாடுகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலை கண்டித்தன. இப்போது மீண்டும் ஓமனை இஸ்ரேல் தாக்கும்போது அதேபோல் அரபு நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்கலாம்.
இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை இன்னும் அதிகரிக்கும். இதனால் ஓமனை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஏற்படும். இதனால் ஓமன் - இஸ்ரேல் இடையே வளர்ந்து வரும் பகை டிரம்புக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications