லெபனானை உருக்குலைத்த இஸ்ரேல் விமானப்படை.. 274 பேர் பலி.. புதிய எச்சரிக்கையால் மக்கள் பதற்றம்!
பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 300 இடங்களில் மீது 12 போர் விமானங்களில் குண்டு வீசியது இஸ்ரேல் விமானப்படை. தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 17 ஆம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இதிலும் பலர் பலியாகினர். ஆயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இதனால் போர் பதற்றம் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில், லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் விமானப்படை இன்று அதிகாலை தெற்கு லெபனான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, அடுத்த நகர்வாக ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்திட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
லெபானான் பொதுமக்கள் பயன்படுத்தும் செல்போன்களில் பலரின் போன்களுக்கு இஸ்ரேல் எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளது. இதில் குறிப்பிட்ட வரைபடத்தை பகிர்ந்துள்ளதாகவும், அங்கு ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்கள் இருப்பதாகவும், எனவே அங்கெல்லாம் குண்டு வீசப்போகிறோம் என்றும் அந்தப் பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் விமானப்படை லெபனானில் நடத்திய தாக்குதலில் 274 பேர் பலியாகியுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலை விரிவுபடுத்த உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் லெபனான் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.
இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இதைத் தொடர்ந்து ஹமாஸுக்கு பதிலடி கொடுக்க பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தத் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானில் இருந்தவாறு இஸ்ரேல் ராணுவ நிலைகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, தற்போது போர் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications