இஸ்ரேல் வைத்த ட்விஸ்ட்.. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இழுபறி.. திடீர் தாக்குதலில் 77 பேர் பலி
டெல்அவிவ்: இஸ்ரேல் - காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பதால் போர் நிறுத்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனால் காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். இதற்கிடையே தான் இன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரைவையுடன் ஆலோசிக்க உள்ளார்.
இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா இடையே எல்லை பிரச்சனை நீண்டகாலமாக உள்ளது. இந்த பிரச்சனை என்பது கடந்த 2023ம் ஆண்டு போராக மாறியது. காசா என்பது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இஸ்ரேல் அதன் மீது போரை தொடங்கியது.

இந்த போர் ஓராண்டை கடந்து நடந்து வருகிறது. இதில் காசாவில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்துள்ளனர். அதோடு சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, லட்சக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் - காசா போரை நிறுத்த பல்வேறு நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள வேண்டும் தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் செவி சாய்க்கவில்லை. இதற்கிடையே தான் காசாவில் போரை நிறுத்துவதற்கும், பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும் இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு முக்கிய உடன்பாடிக்கையை எட்டின. இதுதொடர்பான அறிவிப்பு என்பது கடந்த 15ம் தேதி வெளியானது.
அமெரிக்காவின் ஆதரவுடன் எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்களால் பல மாதங்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது காசா மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்த்தை பல நாடுகளும் வரவேற்றன. அதோடு காசாவில் வசிக்கும் மக்கள் கொண்டாட தொடங்கினர்.
இந்நிலையில் தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திடீர் ட்விஸ்ட் வைத்துள்ளது இஸ்ரேல். அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை இன்னும் இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. இஸ்ரேல் அமைச்சரவையை கூட்டி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டால் மட்டுமே அது அமலுக்கு வரும். இதையடுத்து நேற்று அமைச்சரவை கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் உள்பட அமைச்சரவை சகாக்களுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கப்படும் நிலையில் தான் இஸ்ரேல் - காசா போர் என்பது முடிவுக்கு வரும். இல்லாவிட்டால் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரை தொடரும்.
இஸ்ரேல் - காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சிலவற்றை ஹமாஸ் பின்பற்ற மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கும் அமைச்சரவை கூட்டத்தை தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உள்ளபடி அனைத்து பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டம் என்பது அதிக கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் இஸ்ரேல் - காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனாலும் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வராத நிலையில் நேற்று காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வெளி தாக்குதலை நடத்தியது. இதில் 77 பேர் வரை இறந்துள்ளனர்.
இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது தளர்வான முடிவாக உள்ளது. இன்னும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது உறுதி செய்யப்படாதது கவலையளிக்கிறது. இருப்பினும் திட்டமிட்டப்படி வரும் 19ம் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்'' என்று நம்புகிறேன்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications