"போரை நிறுத்த நாங்க தயார், ஆனால்.." இஸ்ரேல் போட்ட கண்டிஷன்கள்! அமெரிக்காவுக்கு போன சீக்ரெட் ஆவணம்
டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே லெபனானில் போரை நிறுத்த இஸ்ரேல் இரண்டு கண்டிஷன்களை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆவணத்தையும் அமெரிக்காவிடம் இஸ்ரேல் சமர்ப்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய அமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: குறிப்பாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாகத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மிக மோசமான சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியோஸ் என்ற செய்தி நிறுவனம் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது ஹமாஸ் மட்டுமின்றி இஸ்ரேல் இப்போது லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே லெபனானில் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், புலம்பெயர்ந்த இரு நாட்டு மக்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதை அனுமதிக்கவும் இஸ்ரேல் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறது.
கண்டிஷன்: இது தொடர்பான ஆவணத்தை இஸ்ரேல் கடந்த வாரம் தான் அமெரிக்காவிடம் அளித்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் அமோஸ் ஹோச்ஸ்டீன் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு செல்லும் நிலையில், தனது நிபந்தனைகளை இஸ்ரேல் விதித்துள்ளது.
இது மட்டுமின்றி இஸ்ரேல் விதித்துள்ள கண்டிஷன்கள் குறித்த தகவலையும் ஆக்சியோஸ் வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் எல்லையில் மீண்டும் ஹிஸ்புல்லா வலிமையாக உருவெடுக்காமல் இருக்கவும் எல்லை அருகே பயங்கரவாத உள்கட்டமைப்பு மீண்டும் உருவாகாமல் இருக்கவும் இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பது ஒரு கண்டிஷன்.
பின்னணி என்ன: அடுத்து லெபனான் வான்வெளியில் இஸ்ரேல் விமானப் படை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும் இஸ்ரேல் கோரியுள்ளது. இந்த இரண்டும் தான் இஸ்ரேல் வைக்கும் கோரிக்கையாகும். இந்த இரண்டு கோரிக்கையும் ஏற்கப்பட்டால் லெபனானில் நடத்தும் தாக்குதலை முற்றிலும் நிறுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது.
ஆனால், இஸ்ரேலின் இந்த கண்டிஷன்களுக்கு லெபனானும் சரி சர்வதேச சமூகமும் சரி உடன்படுவது சாத்தியமில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஏனென்றால், இது கிட்டத்தட்ட லெபனான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் உரிமையை இஸ்ரேலுக்குக் கொடுத்துவிடும். இதன் காரணமாகவே இதை லெபனான் ஏற்க வாய்ப்பு கம்மி என அந்த அமெரிக்க அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை: அதேநேரம் அமெரிக்க வெளியுறவுத் துறை இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் கூறவில்லை. இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு கருத்தையும் குறிப்பிடவில்லை. அதேநேரம் வெள்ளை மாளிகையின் சிறப்புத் தூதர் அமோஸ் ஹோச்ஸ்டீன் இன்று பெய்ரூட் செல்லும் நிலையில், இது தொடர்பாக அவர் அங்கு ஆலோசிப்பார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications