ஈரான் அதிபர் மசூத் மீது கொலை முயற்சி! சுற்றி வளைத்த இஸ்ரேல் டிரோன்கள்.. திடீரென ஆரம்பித்த தாக்குதல்!
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த மாதம் 12 நாள் போர் நடந்தது. இரு நாடுகளும் மாறி தாக்கிக் கொண்டன. குறிப்பாக ஈரானின் பல உயர்மட்டத் தலைவர்களை இஸ்ரேல் வரிசையாகக் காலி செய்தது. இதற்கிடையே ஈரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த மாதம் மத்தியக் கிழக்கில் மோதல் வெடித்தது. இஸ்ரேல் ஈரான் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தின. கடைசியில் அமெரிக்கா கூட நேரடியாக உள்ளே வந்து ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதன் பிறகே இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தாலும் கூட அது குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.

ஈரான் அதிபரைக் கொல்ல முயற்சி
இந்த வான்வழித் தாக்குதலில் மசூத் இலேசாகக் காயமடைந்தாக ஈரானின் புரட்சிகரக் காவல்படை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 16ம் தேதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணை விழுந்ததில் பெஸெஷ்கியான் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
அந்தக் கட்டிடத்தில்தான் ஈரான் உயர்மட்டத் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. அதிபர் பெஸெஷ்கியான் தவிர, நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், நீதித்துறைத் தலைவர் மொஹ்சேனி எஜே உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பலரும் அந்தக் கூட்டத்தில் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்ததாகவும் அப்போது தான் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 6 ஏவுகணைகள்
பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை போலவே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. தப்பிக்கும் வழிகளைத் தடுக்கவும், காற்றோட்டத்தைத் தடுக்கவும் ஒரே நேரத்தில் ஆறு ஏவுகணைகள் அனுப்பிய கட்டிடத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் அதிகாரிகள் கட்டிடத்தின் கீழ் தளங்களில் இருந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருப்பினும், இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் ஈரான் முன்கூட்டியே ஒரு அவசரக்காலத் திட்டத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தது. அதன் வழியாகவே ஈரான் அதிபர் உள்ளிட்டோர் தப்பிக்க முடிந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயங்கள்
இந்த டிரோன் தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறும் போது அதிபர் பெஸெஷ்கியான் மட்டுமின்றி வேறு சில அதிகாரிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், இந்தத் தாக்குதல் துல்லியமாக நடந்துள்ளது. சரியான இடம், சரியான தளம், யாரெல்லாம் அதில் கலந்து கொண்டனர் என எல்லாத் தவல்களையும் வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது போலத் தெரிகிறது. இதனால் ஊடுருவல்காரர் இருக்கலாம் என்றும் அவரே தகவலைப் பகிர்ந்திருக்கலாம் என்றும் ஈரான் சந்தேகிக்கிறது. இதனால் அது குறித்து இப்போது ஈரான் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
முன்னதாக ஈரான் அதிபர் பெஸெஷ்கியான் தன்னை இஸ்ரேல் கொல்ல முயல்வதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர், "அவர்கள் என்னைக் கொல்ல முயற்சி செய்தார்கள்.. அதற்குத் திட்டமிட்டுச் செயல்பட்டனர்.. ஆனால் அவர்கள் தோல்வியடைந்தார்கள்" என்று கூறியிருந்தார்.
முக்கிய தலைவர்கள் காலி
இஸ்ரேல் ஈரான் இடையே நடந்த 12 நாள் போரின் போது, ஈரானின் பல உயர்மட்ட ராணுவத் தலைவர்களையும், அணு ஆய்வாளர்களையும் இஸ்ரேல் காலி செய்தது. அதுவும் போரின் தொடக்க நாளிலேயே பலரையும் கொன்றது. குறிப்பாக ஈரான் கவால் படை தளபதி ஹொசைன் சலாமி, ஈரான் ஆயுதப்படைத் தலைவர் முகமது பாகேரி, ஐ.ஆர்.சி.ஜி விமானப்படை தளபதி அமீர் அலி ஹாஜிசாடே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
ஈரானின் அரசு மற்றும் ராணுவத்தில் பல இஸ்ரேல் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் கொடுத்த தகவல்களால் இஸ்ரேலால் இந்தளவுக்குத் துல்லியமான தாக்குதல்களை நடத்த முடிந்ததாக அப்போதே கூறப்பட்டது.
அயதுல்லா அலி காமேனி
இந்த 12 நாள் போரின்போது, ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி காமேனியையும் கூட இஸ்ரேல் கொல்லத் திட்டமிட்டது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாகவே இதை எச்சரித்திருந்தார். இருப்பினும், சரியான தருணம் அமையாததால் கொல்ல முடியாமல் போனதாகத் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications