இஸ்ரேல் - ஈரான் பயங்கர மோதல்.. எந்தெந்த நாடுகள் யாருக்கு ஆதரவு? இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
டெல்அவிவ்: ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதலுக்கு நேரடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில் தான் 3வது உலகப்போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் மல்லுக்கட்டி நிற்கும் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு ஆதரவாக எந்தெந்த நாடுகள் இருக்கின்றன? என்பது பற்றியும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய முக்கிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் 2 நாள் முடிந்தால் காசா மீது இஸ்ரேல் போர் தொடங்கி ஓராண்டு முடிந்துவிடும். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம்தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதோடு, எல்லை தாண்டி வந்து இஸ்ரேலியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தார். அன்று தொடங்கிய இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. மாறாக இஸ்ரேல் - காசா போர் என்பது பிற நாடுகளுடனான மோதலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் என்பது தற்போது இஸ்ரேல் - ஈரான் என உருமாறி நிற்கிறது.
ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. இஸ்ரேல் அந்த அமைப்புகள் மீது தாக்குதல் நடத்து தலைவர்கள், தளபதிகளை கொல்வதால் ஈரான் நேரடியாக களமிறங்கி உள்ளது. தற்போது முதற்கட்டமாக இஸ்ரேல் மீது ஈரான் 200 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. அதேபோல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கூட, ‛‛எங்களை தாக்குபவர்களை நாங்களும் திரும்ப தாக்குவோம். இதில் எந்த பாரபட்சமும் பார்க்க மாட்டோம்'' என கூறியுள்ளார். அதேபோல் ஈரானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கலாம் என்பதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதலில் எந்தெந்த நாடுகள் யாருக்கு ஆதரவு என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன. இந்த நாடுகள் இஸ்ரேலுக்கு தேவையான நிதி உதவி, ஆயுத உதவிகளையும் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்து இருந்தது. இதன்மூலம் அமெரிக்கா முழுமையாக இஸ்ரேல் பக்கம் உள்ளது. அதேபோல் இந்த விவகாரத்தில் பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் வெளிப்படையாக கருத்து சொல்லாமல் இருந்தாலும் கூட இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன.
அதேபோல் ஈரானுக்கும் பல நாடுகளில் செயல்படும் அமைப்புகள் ஆதரவாக உள்ளன. அதன்படி ஈராக்கில் செயல்பட்டு வரும் அ் நுஜாபா, மஹ்தி ராணுவம், சிரியாவில் செயல்பட்டு வரும் அஷ் சாஇக்பா, ஃபாதா்ல்இன்டிஃபாதா, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா, இஸ்லாமிக் ஜிஹகாதி, பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாதி, ஏமனில் இயங்கும் ஹவுதிகள் உள்ளிட்டவை ஈரானுக்கு ஆதரவாக உள்ளன. அதேபோல் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட சீனா மற்றும் ரஷ்யாவும் ஈரான் பக்கம் உள்ளன.
அதேபோல் சவூதி அரேபியா, ஜெர்மனி, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளும் வெளிப்படையாக ஆதரவை அறிவிக்காத போதிலும் கூட மோதலை கைவிட வேண்டும். போரை கைவிட வேண்டும் என கூறிவருகின்றன. குறிப்பாக சவூதி அரேபியாவின் நிலைப்பாடு என்பது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. அதாவது காசா மீதான போர் நடவடிக்கை விஷயத்தில் இஸ்ரேலை, சவூதி அரேபியா கண்டித்தது. ஜெருசலேமை உள்ளடக்கிய சுதந்திரமான பாலஸ்தீனம் அமைய வேண்டும். அதுவரை இஸ்ரேலுடன் எந்த நேரடி உறவும் கிடையாது என கூறியது. ஆனாலும் கூட லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லாவை இஸ்ரேல் கொன்றதை கண்டிக்கவில்லை. அவரது பெயரை கூறாமல் வெறுமனே அந்த லெபனானில் நிலவும் நிலை கவலையளிப்பதாக மட்டுமே கூறியது. அதேபோல் இஸ்ரேல் மீதான தாக்குதலிலும் ஈரானுக்கு சவூதி ஆதரிக்கவில்லை.
அதேபோல் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு பிறகு கத்தார் தலைநகர் தோஹாவில் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டனர். இதில் ஈரான் நாட்டு அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த வேளையில் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலில் நடுநிலை வகிக்க போவதாக சவூதிஅரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், குவைத் சார்பில் ஈரானிடம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த நாடுகள் நடுநிலையில் உள்ளனர்.
மேலும் இந்தியாவை பொறுத்தமட்டில் பாலஸ்தீனத்தை 1988 ல் தனி நாடாக அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும் கூட தற்போது இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ்அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து இஸ்ரேல் பக்கம் நின்றார்.
மேலும் ஐக்கிய நாடுகள் பொது சபையில் சமீபத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் என்பது ஓராண்டுக்குள் பாலஸ்தீனத்தின் காசா மற்றும் மேற்கு கரையில் இருந்து இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த தீர்மானத்தில் இந்தியா ஓட்டளிக்கவில்ல. இதனால் இந்தியா, இஸ்ரேல் பக்கம் நிற்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா தொடர்ந்து நிற்பது முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications