மனித விலங்குகளுடன் போரிடுகிறோம்.. பாலஸ்தீனத்திற்கு எதிராக வெறுப்பை கக்கிய இஸ்ரேல் அமைச்சர்!
இஸ்ரேல்: காசா மீது போரை இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், காசாவுக்கு செல்லும் கேஸ், நீர், உணவு பொருட்கள் என அனைத்தையும் இஸ்ரேல் தடுத்திருக்கிறது. இந்த போர் குறித்து பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு துறை அமைச்சர், "நாங்கள் மனித விலங்குகளுடன் போரிடுகிறோம்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளது. இஸ்ரேலிய படைகள் காசாவை முற்றுகையிட்டுள்ளன. மட்டுமல்லாது காசாவுக்கு செல்லும் எரிவாயு, உணவு மற்றும் குடிநீர் பாதைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "நீண்ட போருக்கு தயாராகுங்கள்" என தங்களது படையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலிய விமானப்படை கடந்த 20 மணி நேரத்தில் காசா மீது 2,000 வெடிமருந்துகள் மற்றும் 1,000 டன்களுக்கும் அதிகமான குண்டுகளை வீசியுள்ளது.
20 உயரமான குடியிருப்பு கட்டிடங்கள், மசூதிகள், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் பொதுமக்களின் வசிப்பிடங்களிலும் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 91 குழந்தைகள் உட்பட 500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2,700 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறுகையில், "நாங்கள் மனித விலங்குகளுடன் போரிடுகிறோம். அதற்கான வழிமுறையை பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேபோல இஸ்ரேலின் பதில் தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மறைமுகமாக பாலஸ்தீனம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தற்போதைய சூழலில் இஸ்ரேல் அமெரிக்காவிடம் உதவிகளை எதிர்பார்க்கிறது. அமெரிக்கா மட்டும் இஸ்ரேலில் நுழைந்துவிட்டால் ஈரானை வைத்து ரஷ்யாவும், சீனாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கிவிடும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications