அமெரிக்காவுக்கு இடி.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
மாஸ்கோ: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புதின் உடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். புதின் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்துள்ளது. இந்தியா ரஷ்ய எண்ணெய்யை வாங்கி லாபம் ஈட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால், இந்தியா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்யா சென்றுள்ளார். இன்று அவர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவை சந்தித்து பேசினார். அதன் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெய்சங்கர், "ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவில்லை. சீனா தான் வாங்குகிறது. அதேபோல், இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் தான் வாங்குகின்றன. இந்தியா வாங்கவில்லை. 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு, ரஷ்யாவிடம் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தை கொண்ட நாடு இந்தியா அல்ல. தெற்கில் சில நாடுகள் உள்ளன.
உலக எரிசக்தி சந்தையை சமப்படுத்த, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட அனைத்தையும் செய்ய வேண்டும் என அமெரிக்கர்கள் கடந்த சில ஆண்டாக சொல்லி வந்தனர். அமெரிக்காவில் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். அதன் அளவு அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்த ஜெய்சங்கர், இரு நாட்டு உறவு, வர்த்தகம், அமெரிக்க வரி விதிப்பு குறித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வர இருக்கிறார். அதை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாக இந்த சந்திப்பு அமைந்தது.
ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அன்பான வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்துக் கொண்டேன்.
முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் மற்றும் நிதி அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருடனான எனது கலந்துரையாடல்களை அவருக்குத் தெரிவித்தேன். வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. உலகளாவிய நிலைமை மற்றும் உக்ரைன் குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அவரது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications