Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேசத்தில் முடிவுக்கு வந்த பகை.. காலமான கலிதா ஜியா.. வெளியேறிய ஹசீனா! 40 ஆண்டு எதிரியானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அதேபால் ஷேக் ஹசீனா அந்த நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கதேச அரசியலில் இவர்கள் 2 பேரும் எதிரிகள் என்றாலும் கூட இருவரும் அரசியல் என்ட்ரி கொடுப்பதற்கு முக்கிய காரணம் ஒன்று தான். அது தான் குடும்ப படுகொலைகள். அப்படி என்ன நடந்தது? இருவரும் எதிரியாக செயல்பட்டது எப்படி? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

வங்கதேச அரசியலில் தவிர்க்க முடியாத 2 பெண் ஆளுமைகள் என்றால் அது ஒன்று கலிதா ஜியா. இன்னொன்று ஷேக் ஹசீனா. கடந்த 40 ஆண்டுகளாக இந்த 2 பெண்கள் தான் வங்கதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து வந்தனர். கடந்த 1991 முதல் 2024ம் ஆண்டு வரை இவர்கள் தான் மாறி மாறி பிரதமராக இருந்தனர். இடையிடையே மட்டும் சில காலத்துக்கு மற்றவர்கள் பிரதமராக இருந்தனர்.

கலிதா ஜியா பிஎன்பி கட்சியை நடத்தி வந்தார். 1991 முதல் 1996 வரையும் பிறகு 2001 முதல் 2006 வரையும் பிரதமராக இருந்தார். மறுபுறம் ஷேக் ஹசீனா1996 முதல் 2001ம் ஆண்டு வரையும், பிறகு 2009 முதல் 2024 வரையும் பிரதமராக இருந்தார். இப்படியான சூழலில் தான் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை விட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

இதனால் மீண்டும் ஆட்சியை பிடிக்க கலிதா ஜியா முயன்ற நிலையில் தான் தனது 80 வது வயதில் அவர் இன்று காலமானார். கல்லீரல், இதயம், சர்க்கரை நோய் உள்பட பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த அவர் இன்று டாக்காவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். கலிதா ஜியா நம் நாட்டுக்கு எதிரானவர். அதேவேளையில் ஷேக் ஹசீனா நம் நாட்டின் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். இப்படி அரசியலில் எதிரெதிர் துருவமாக செயல்பட்டு வந்த கலிதா ஜியா, ஷேக் ஹசீனா ஆகியோர் இப்போது வங்கதேசத்தில் இல்லை.

கலிதா ஜியா காலமான நிலையில் ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளது. அதோடு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்ப முடியாத நிலை உள்ளது. வங்கதேசத்தில் பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட அவரது கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வங்கதேச அரசியலை ஆட்டிப்படைத்த இந்த பெண்மணிகள் இல்லாமல் முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.

வங்கதேசத்தின் வளர்ச்சி, வங்கதேசத்தில் நடந்த ஆட்சி கலைப்பு, போராட்டம், குண்டுவெடிப்பு, மாணவர்கள் போராட்டம், வன்முறை என்று அனைத்து வகையான அரசியலுக்கும் இவர்கள் 2 பேரும் பெயர் பெற்றவர்கள். இதற்கிடையே தான் இருவரும் அரசியல் என்ட்ரி கொடுத்ததன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணம் துரோகம் மற்றும் குடும்ப படுகொலை தான். அதாவது வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து 1971ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.

தனிநாடு கோரி போராடியவர்களுக்கு ஆதரவாக நம் நாட்டின் ராணுவம் களமிறங்கி பாகிஸ்தான் ராணுவத்தை அடிபணிய வைத்தது. இதன்பிறகு தான் 1971ம் ஆண்டில் வங்கதேசம் தனிநாடாக பிறந்தது. அதன்பிறகு நாட்டின் முதல் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் ஷேக் முஜிபூர் ரஹ்மான் பொறுப்பேற்றார். இவர் தான் வங்கதேசத்தை தனி நாடாக்கும் முன்முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

இந்த ஷேக் முஜிபூர் ரஹ்மான் மகள் தான் ஷேக் ஹசீனா. 1975ல் நடந்த ராணுவ புரட்சியில் ஷேக் முஜிபூர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். அவர் மட்டுமின்றி குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். ஷேக் ஹசீனா தப்பினார். அவர் வெளிநாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். தந்தை ஷேக் முஜிபூர் ரஹ்மான் மற்றும் குடும்பத்தினர் படுகொலையை தொடர்ந்து ஷேக் ஹசீனா அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

1981ம் ஆண்டில் அவாமி லீக் கட்சியின் தலைவரானார். அதன்பிறகு தனது தந்தைக்கு உதவிய நம் நாட்டின் ராணுவத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில் தொடர்ந்து இந்தியாவுடன் நட்டு பாராட்டி வந்தார். தற்போது மாணவர்கள் போராட்டம்- வன்முறையால் கடந்த ஆண்டு முதல் நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதேபோல் கலிதா ஜியாவை எடுத்து கொண்டால் அவரது கணவர் பெயர் ஜியாவுர் ரஹ்மான். இவர் தான் அவர் தான் பிஎன்பி கட்சியை நிறுவினார். வங்கதேசத்தின் 6வது அதிபராக செயல்பட்டார். அவர் 1981ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். 1981ம் ஆண்டில் மே 30ம் தேதி ராணுவ அதிகாரிகள் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன்ர்.

அப்போது ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். இது கலிதா ஜியாவால் தாங்க முடியவில்லை. அதுவரை ஹவுஸ் ஒய்ப்பாக இருந்த கலிதா ஜியா அரசியலில் நுழைந்தார். கணவர் படுகொலையை தொடர்ந்து தான் கலிதா ஜியா பிஎன்பி கட்சியின் தலைவரானார்.
கடந்த 1984ம் ஆண்டு முதல் அவர்அந்த கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது மறைந்துள்ளார்.

கலிதா ஜியா 1991 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்று வரலாறு படைத்தார். பிறகு 2001 -2006 வரை பிரதமராக இருந்தார். ஒவ்வொரு தேர்தலிலும் ஷேக் ஹசீனா - கலிதா ஜியா இடையே தீவிரமான போட்டி நடந்தது. இருவரும் மாறி மாறி பிரதமராகி வந்தனர்.

கலிதா ஜியா இந்தியா எதிர்ப்பிலும், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு ஆதரவாகவும் இருந்தார். ஷேக் ஹசீனா மதஅடிப்படைவாதிகளை கூட்டு சேர்ப்பது இல்லை. ஆனால் கலிதா ஜியா மதஅடிப்படைவாதிகளுடன் கூட்டணி வைத்து இருந்தார். வங்கதேசத்தை பொறுத்தவரை இந்தியாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக இன்னொரு தரப்பினரும் இருந்தனர். இதில் இந்தியாவுக்கு ஆதரவு நிலைப்பாடு அரசியலை பயன்படுத்தி ஷேக் ஹசீனா வென்று வந்த நிலையில் கலிதா ஜியா இந்தியா எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி இருந்தார்.

ஆனால், 2009ம் ஆண்டுக்கு பிறகு ஷேக் ஹசீனாவை, கலிதா ஜியாவால் வீழ்த்த முடியவில்லை. 2009, 2014, 2019, 2024 என அனைத்து தேர்தல்களிலும் ஷேக் ஹசீனா தான் வென்றார். இப்போது, வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவும், கலிதா ஜியாவும் இல்லாத நிலையில் முதல் முறையாக 2026 பிப்ரவரி மாதம் 12ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் களமிறங்க தடை உள்ள நிலையில் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி அவரது மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+