துபாயில் குட்டீஸ்களை மகிழ்வித்து வரும் மாதேஸ் உலகம்
துபாய்: துபாயில் கோடை விழாவினையொட்டி நடைபெற்று வரும் மாதேஸ் உலகம் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி குழந்தைகளை மகிழ்வித்து வருகிறது.

துபாயில் கோடை விடுமுறை கொண்டாட்டம் ஜுலை 23ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதனையொட்டி துபாயில் உள்ள பல்வேறு வணிக வளாகங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

முக்கியமாக துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் மாதேஸ் உலகம் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியினைக் காண்பதற்கு ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாது சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும், சுற்றுலாப் பயணிகளும் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.

இந்த இடம் உள்அரங்கு போல் இருப்பதால் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்ப முடியும். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் அதிகமாக இங்கு வருகின்றனர். ஊஞ்சல், தண்ணீரில் சிறிய படகு மூலம் செல்லுதல், பொம்மை, பலூன், சர்க்கஸ் போன்ற சாகச விளையாட்டு என அனைத்து நிகழ்ச்சிகளும் குழந்தைகளை மகிழ்வித்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சிகளின் காரணமாக பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை அதிக அளவில் இங்கு அழைத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications