ஆதரவாக நிற்கும் பாக். ராணுவம்.. "இந்தியாவுக்கு என்னை கண்டாலே பயம்!" திமிராக பேசிய லஷ்கர் பயங்கரவாதி!
இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தெய்பா அமைப்பின் முக்கியத் தலைவரான சைபுல்லா கசூரி இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தனக்கும் இடையே இருக்கும் தொடர்பு ஒப்புக்கொண்டுள்ள பயங்கரவாதி கசூரி, இந்தியா தன்னை கண்டு அஞ்சுவதாகவும் வாய்க்கு வந்ததைப் பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் சுதந்திரமாகவே இயங்குகிறார்கள். பல நேரங்களில் ராணுவமே அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறது. பொதுவெளியில் பாகிஸ்தான் ராணுவம் இதை மறுத்தாலும் உண்மையில் அங்கு அதுதான் நடக்கிறது. இதற்கிடையே லஷ்கர்-இ-தெய்பா அமைப்பின் முக்கியத் தலைவரான சைபுல்லா கசூரி இப்போது அதை ஒப்புக்கொள்ளும் வகையில் பேசியுள்ளது.

கசூரி
பாகிஸ்தான் ராணுவத்துடன் நேரடித் தொடர்பை ஒப்புக்கொண்ட சைபுல்லா கசூரி, பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்குத் தனக்குத் தொடர் அழைப்புகள் வருவதாகவும், அதன் வீரர்களின் மத சடங்குகளை நடத்த அழைப்புகள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஹஃபீஸ் சையித் தலைமையிலான லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவரான கசூரி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவராவார்.
பாகிஸ்தானில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பேசும்போது கசூரி இந்தக் கருத்துகளைக் கூறினார். அவர் மேலும், "பாகிஸ்தான் ராணுவம் எனக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைக்கிறது... அதன் வீரர்களுக்கு மத சடங்குகளை நடத்த அழைக்கிறது" எனக் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தீவிரவாத குழுக்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது.
இந்தியாவுக்குப் பயம்
பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச அரங்கில் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகத் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதற்கு நேர் முரணாகக் கசூரி கருத்துகள் உள்ளன. ராணுவத்திற்கும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத குழுக்களுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை அம்பலப்படுத்துகிறது. கசூரி இத்தோடு நிற்காமல் இந்தியா குறித்தும் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார். தன்னை கண்டு இந்தியா பயப்படுவதாகவும் பேசியிருக்கிறார். அவர் மேலும், "இந்தியா என்னைப் பார்த்து அஞ்சுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று அவராகவே கூறிக் கொண்டார்.
மாபெரும் தவறு
முன்னதாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கசூர் நகரில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்ட கசூரி அங்கும் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது அவர், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதால், எனது பெயர் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்தியா தனது ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தில் பயங்கரவாத முகாம்களை அழித்தது. ஆனால், அது மாபெரும் தவறு! எங்கள் இடங்களை அழித்து இந்தியா மாபெரும் தவறு செய்துவிட்டது. காஷ்மீரிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு அப்போதே சர்ச்சையாகி இருந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அரசு அல்லது பாகிஸ்தான் ராணுவம் இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தரவில்லை. அவர்கள் மவுனம் காக்கவே செய்தார்கள். இந்தச் சூழலில் தான் கசூரி மீண்டும் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
பின்னணி
ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக இந்தியா கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழித்தது. இதையடுத்து நான்கு நாட்கள் எல்லையில் இரு நாடுகளும் தாக்கிக் கொண்டன. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மே 10ம் தேதி தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.












Click it and Unblock the Notifications