எட்டி கூட பார்க்காத சர்வதேச விமான நிறுவனங்கள்.. பாகிஸ்தானுக்கு பல கோடி நஷ்டம்.! விழுந்த மற்றொரு அடி
டெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியா எப்போது வேண்டுமானாலும் பதிலடி தரும் எனச் சொல்லப்படும் நிலையில், திடீரென பல முக்கிய சர்வதேச விமான நிறுவனங்கள் இப்போது பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டது. இதுவும் கூட நீண்ட கால நோக்கில் பாகிஸ்தானுக்குப் பெரிய அடியைக் கொடுக்கும்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக இரு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாக்குதல் நடந்த சமயத்திலேயே பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தக்கூடாது என அந்நாடு அறிவித்திருந்தது. தொடர்ந்து கடந்த வாரம் பாகிஸ்தான் விமானங்களும் இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.

சர்வதேச விமான நிறுவனங்கள்
இதற்கிடையே இப்போது இந்திய விமானங்கள் மட்டுமின்றி பல்வேறு சர்வதேச விமானங்களும் கூட பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஐக்கிய அமீரகம் மற்றும் ஜெர்மனியின் லுஃப்தான்சா ஆகியவையும் கூட பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது சர்வதேச விமான நிறுவனங்களும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதை நிறுத்த தொடங்கிவிட்டன.
விமானங்களின் டேட்டா
ஃபிளைட்ராடார்24இன் டேட்டாவை வைத்துப் பார்த்தால் இது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஜெர்மனியின் பிராங்பேர்ட்டிலிருந்து டெல்லிக்கு வரும் லுஃப்தான்சா விமானம் LH760 இப்போது கூடுதலாக ஒரு மணி நேரம் பறந்துள்ளது. பாகிஸ்தான் வான்வெளியை லுஃப்தான்சா விமானம் பயன்படுத்தாததாலேயே கூடுதல் நேரம் ஆகியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்ப்பதாக லுஃப்தான்சா குழுமம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அங்குள்ள சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லுஃப்தான்சா குழுமம் தெரிவித்துள்ளது.
அதேபோல பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்த்து அரேபியக் கடல் வழியாகப் பயணித்துள்ளது. அதேபோல சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சில விமானங்களும் பாகிஸ்தான் ஏர் ஸ்பேஸ்ஸை தவிர்த்து வருவது தெரிய வந்துள்ளது.
அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தைக் காரணம்காட்டி ஏர் பிரான்ஸ் விமான நிறுவனமும் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்ப்பதாக அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்தப் போவதில்லை என்பதை ஏர் பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்ப்பதால் விமானப் பயணங்களுக்குக் கூடுதல் நேரம் ஆகிறது. இதனால் டெல்லி, பாங்காக் மற்றும் ஹோ சி மின் போன்ற இடங்களுக்கான அட்டவணையையும் திட்டங்களையும் மாற்றி வருவதாக ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
மறுபுறம் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவை இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த நிறுவனங்களின் விமான டேட்டாவை வைத்துப் பார்த்தால் அவை பாகிஸ்தானைத் தவிர்த்து வருவது தெளிவாகத் தெரிகிறது.
இழக்கும் பாகிஸ்தான்
பொதுவாக ஒரு விமான நிறுவனம் ஒரு நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துகிறது என்றால் அதற்குக் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விமானத்தின் சைஸ், வான்வெளியில் எவ்வளவு தூரத்தைப் பயன்படுத்துகிறது ஆகியவற்றை கணக்கில் கொண்டு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இப்போது சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்க்கும் நிலையில், அந்நாட்டிற்கான வருமானம் கணிசமாகப் பாதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications