மனுஷன் வாழ்ந்துருக்காரு! 20 மனைவி..104 வாரிசு..144 பேரன்! ஒரு கிராமத்தை வைத்து சமாளிக்கும் கபிங்கா!
டோடோமா: தான்சானியா நாட்டைச் சேர்ந்த பழங்குடியின நபர் ஒருவர் 1961 முதல் தற்போது வரை 20 திருமணம் செய்துள்ளார். 4 மனைவிகள் இறந்த நிலையில் தற்போது அவருக்கு 16 மனைவிகளும், 104 வாரிசுகளுடனும், 144 பேரன் பேத்திகளுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் குறித்த செய்திதான் உலக அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
ஒரு திருமணம் முடித்துவிட்டு சமாளிக்க முடியவில்லை. இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு படிப்பு முதல் மருத்துவம் என பல செலவுகள் இருக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை என பலர் புலம்புவதை பார்த்திருக்கலாம்.

நமது நாட்டில் கூட கடந்த சில தலைமுறைகள் ஏழு குழந்தைகள் எட்டு குழந்தைகள் வரை இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு குடும்ப கட்டுப்பாடு, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக ஒருவனுக்கு ஒருத்தி, ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை என மாறிவிட்டது.
தற்போதெல்லாம் ஒரு வீட்டில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலே ஆச்சரியம் தான். ஆனால் ஒருவர் 20 திருமணம் முடித்து கிட்டத்தட்ட ஒரு கிராமத்துடனே வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தான்சானியாவில் உள்ள எம்சி எர்னாஸ்ட்டோ முகுன்ஜி கபிங்கா என்பவர்தான் தற்போது உலகம் முழுவதும் பேசக் கூடிய நபராக மாறி இருக்கிறார்.

தான்சானியாவில் சிறிய கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கபிங்கா, 1961 முதல் 20 திருமணம் செய்திருக்கிறார். அதில் நான்கு மனைவிகள் உயிரிழந்து விட்ட நிலையில் தற்போது அவருக்கு 16 மனைவிகள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் 104 குழந்தைகளும், 144 பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். 1961ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டார். அப்போது அவர் தந்தை நமது வம்சத்தை விரிவுபடுத்த வேண்டும் நீ எத்தனை திருமணம் செய்து கொண்டாலும் அதற்கேற்றார் போல் நான் வரதட்சணை தருவேன் என கூறியிருக்கிறார்.
அதை அடுத்து ஏழு சகோதரிகளை கபிங்கா திருமணம் செய்து இருக்கிறார். தொடர்ந்து அவரது திருமணத்திற்கு 5 முறை பணம் கொடுத்து இருக்கிறார் அவரது தந்தை. அதற்குப் பிறகு அடுத்தடுத்து வருடத்திற்கு ஒரு திருமணம் என 20 திருமணம் செய்து இருக்கிறார். அவருக்கு 20 மனைவிகள் இருந்த நிலையில் சிலர் இறந்துவிட்டனர். தற்போது அவருடன் 16 மனைவிகள் வசித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு கிராமம் போலவே கபிங்காவின் குடும்பம் இருக்கிறது. அனைவருக்கும் தனித்தனியாக வீடு தனி தனி சமையல் என இருந்தாலும் வேலைகளை முடித்த பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
கபிங்கா மிகவும் நல்ல மனிதர். அவரது நற்பெயர் காரணமாகவே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் எத்தனை மனைவிகள் இருந்தாலும் அனைவரையும் ஒன்றாக பார்த்துக் கொள்வார். மகன்களையும் பேரன் பேத்திகளையும் கூட அவர் அப்படியேதான் பார்த்திருக்கிறார் என பெருமையுடன் கூறுகின்றனர் அவரது மனைவிகள்.
கிட்டத்தட்ட ஒரு கிராமம் அளவுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். விவசாயம் அவர்களது பிரதான தொழிலாக இருக்கிறது. கடந்த காலங்களில் மகன் மகள்களை படிக்க வைக்காவிட்டாலும் தற்போது பேரன் பேத்திகளை படிக்க வைத்து வருகிறார். மிகப்பெரிய குடும்பம் இருப்பதால் விவசாயத்தையும் அவர்களால் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடிகிறது. தற்போது உலகின் மிகப்பெரிய குடும்பங்களின் பட்டியலில் கபிங்காவின் குடும்பமும் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications