எமெர்ஜென்சி ஆர்டர்.. பெரும் பரபரப்பை கிளப்பிய தென்கொரியா அதிபர்! டக்கென வாபஸ் வாங்கியது ஏன்? பின்னணி
சியோல்: தென்கொரியாவில் அவசர சிலை பிறப்பிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் திரும்ப பெறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு பணிந்த தென்கொரிய அதிபர் யூன், நாட்டு மக்களுக்கு அதிகாலையில் உரையாற்றினார். அப்போது, தேசிய சபை விடுத்த கோரிக்கையை ஏற்று அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக அறிவித்து இருக்கிறார்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று தென்கொரியா. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக தென்கொரியா உள்ளது. வடகொரியாவுடன் மொதல் போக்கு ஆகியவற்றால் கொஞ்சம் பரபரப்பு மிக்க நாடாக இருக்கும் தென்கொரியாவில் திடீரென அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. தென்கொரியாவில் கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எமர்ஜென்சி நிலையை அமல்படுத்துவதாக அதிபர் யூன் சுக் அதிரடியாக அறிவித்தார்.

இது தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் டிவியில் உரையாற்றிய தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கூறுகையில், "வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் நான் அவசரக்கால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துகிறேன். இங்குள்ள எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை..
சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள்" என்றார். தென்கொரிய அதிபரின் இந்த அறிவிப்பால் அந்த நாடே குலுங்கியது. தேசிய அவசர நிலை பிரகடனத்தை அறிவித்த அதிபரின் உத்தரவை முடக்கும் வகையில் நடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நாடளுமன்றத்தில் உள்ள 300 எம்பிக்களில் 190 எம்பிக்கள், தேசிய அவசர நிலை பிரகடனத்தை நீக்க வேண்டும் என்று வாக்களித்தனர். அவசர நிலை பிரகடனத்தை அதிபர் ரத்து செய்யும் வரை அமலில் தான் இருக்கும் என்று ராணுவம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவர்களை ராணுவம் தடுத்து நிறுத்தியதால் அங்கு மோதல் ஏற்பட்டது.
ராணுவம் குவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்திற்கு எகிறி குதிக்கவும் எம்பிக்கள் தயாராகினர். நாடு முழுக்க ஓவர் நைட்டில் உச்ச கட்ட டென்ஷன் எகிறியது. போதாக்குறைக்கு தென்கொரியாவில் ஏற்பட்டு வரும் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறிய அமெரிக்கா, பிரச்சினையை சுமூகமாகவும் சட்டம் என்ன சொல்கிறதோ? அதற்கு உட்பட்டு தீர்க்க வேண்டும் என்று கூறியது.
உள்நாட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், வேறு வழியின்றி பணிந்த தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் அறிவித்த 6 மணி நேரத்திற்குள் தனது முடிவை மாற்றியிருக்கிறார். தென்கொரிய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் யூன் கூறியதாவது:- சில மணி நேரத்திற்கு முன்பாக அவசர நிலையை வாபஸ் பெற வேண்டும் என்று தேசிய சபையில் கோரிக்கை வைக்கப்பட்ட்டது. தேசிய சபையின் இந்த கோரிக்கையை ஏற்று அவசர நிலையை வாபஸ் வாங்குகிறோம். கேபினட் கூட்டம் வாயிலாக இந்த முடிவு எடுக்கப்படுமிறது" என்றார்.












Click it and Unblock the Notifications