மேட்டரே இல்ல!பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட IHU புதிய வகை கொரோனாவால் பயம் வேண்டாம்:விஞ்ஞானிகள்
பாரிஸ்: பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மாறுபாடு பற்றி கவலை அடைய தேவையில்லை எனவும் இந்த வகை ஓமிக்ரான் வைரஸுக்கு முன்பே அடையாளம் காணப்பட்டதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா தொற்றின் ஒமிக்ரான் திரிபு. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் 'IHU' என்ற புதிய கொரோனா திரிபை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த புதிய திரிபு ஒமைக்ரானை விட தீவிரமான தொற்றை பரப்பும் என முதலில் தகவல்கள் வெளியாயின. கடந்த டிசம்பர் 10ஆம் தேதியே இந்த தொற்று கண்டறியபட்டிருந்தாலும் உலக சுகாதார நிறுவனம் அதனை இன்னும் உறுதி செய்யவில்லை.
இந்த IHU திரிபு வைரசுக்கு தற்போது மருத்துவ நிபுணர்கள் அறிவியல் ரீதியாக B.1.640.2 என பெயர் வைத்துள்ளனர். ஆனால் முன்னர் வெளியான தகவல்கள் போல இந்த வகை வைரஸை கண்டு உலக நாடுகள் அச்சமடைய தேவையில்லை எனவும், இது ஓமிக்ரானுக்கு முன்னதாகவே கண்டறியப்பட்டது தான் வைரலாஜி நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸின் முதல் பாதிப்பானது கடந்த ஆண்டு நவம்பர் மாத இரண்டாவது வாரத்தில் , நாசோபார்னீஜியல் ஆய்வகத்தில் செய்யப்பட்ட RTPCR சோதனையில் ஒரு நடுத்தர வயதுடைய நபருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

பிரான்சில் புதிய வைரஸ்
'IHU' என அழைக்கப்படும், B.1.640.2 மாறுபாடு மெடிட்டரேனி இன்ஃபெக்ஷன் இன்ஸ்டிட்யூட் ஆராய்ச்சியாளர்களால் , தெற்கு பிரான்சில் 12 நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பே, பிரான்சில் இருந்து IHU மாறுபாடு கண்டறியப்பட்டது எனவும், அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மாறுபாட்டிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாலும், ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்துள்ளதால் இந்த வகை வைரஸ் அச்சுறுத்தலாக இல்லை எனவும் கூறியுள்ளனர்.

மருத்துவ நிபுணர் கருத்து
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் வைராலஜிஸ்ட் நிபுணர் தாமஸ் பீகாக் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்த மாறுபாடு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு இருந்ததாகவும், ஆனால் உண்மையில் அது செயல்படவில்லை என்றார். ஓமிக்ரான் ஒரு புதிய மாறுபாடாக உலகிற்கு அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, நவம்பர் 4 அன்று, GISAID என்ற மாறுபாடு கண்காணிப்பு தரவுத்தளத்தில் இந்த திரிபு பதிவேற்றப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய வைரஸ் குறித்து பயம் தேவையில்லை
நவம்பர் மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரோன் வைரஸை கவலைக்குரிய மாறுபாடாக அங்கீகரித்த நிலையில் அமெரிக்கா இங்கிலாந்து இந்தியா ஐரோப்பா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது அனைத்து கண்டங்களிலும் பரவியுள்ளது. IHU வகைகளில் இதுவரை 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா ஓமிக்ரான் வகை வைரஸ்களை விட இந்த வைரஸ் பாதிப்பு குறைந்ததாகவே கருதப்படுகிறது.

who அங்கீகரிக்கவில்லை
தற்போது கண்டறியப்பட்டுள்ள ஐந்து வகை வைரஸ் நாற்பத்தி ஆறு பிரிவுகள் மற்றும் முப்பத்தி ஏழு நிலைகள் உள்ளன எனவும் இதன் விளைவாக 30 அமினோ அமில மாற்றுதல் களும் 12 நீக்குதல்களும் உள்ளன. மருத்துவ முறையில் கூற வேண்டும் என்றால் N501Y மற்றும் E484K உட்பட பதினான்கு அமினோ அமிலமாற்றுகள் மற்றும் ஒன்பது நீக்குதல்கள் இந்த ஸ்பைக் வகை வைரஸில் உள்ளன. ப்ரீபிரிண்ட் பேப்பரின் ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் பிலிப் கோல்சன் கூறும்போது, மார்சேய் பகுதியில் இந்த புதிய மாறுபாட்டின் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் தங்களிடம் உள்ளதாக கூறியுள்ளார். B.1.640.2 இதுவரை மற்ற நாடுகளில் அடையாளம் காணப்படவில்லை என்ற ஆறுதல் அளிக்கும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு மாறுபாடாகவே அங்கீகரிக்கவில்லை.












Click it and Unblock the Notifications