ராஃபா எல்லையில் லட்சக்கணக்கான மக்கள்! தீவிர தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்.. உலக நாடுகள் எச்சரிக்கை
காசா: பாலஸ்தீனம் மீது தனது தாக்குதலை விரிவாக்கும் விதமாக ராஃபாவிலிருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டது. அங்கு 15 லட்சம் பாலஸ்தீனர்கள் இருக்கும் நிலையில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே தற்போது வரை வெளியேறியுள்ளனர். மீதமுள்ளோரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,500க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.
மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.
மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
போருக்கு இவ்வளவு எதிர்ப்புகள் எழுந்த பின்னரும், இஸ்ரேல் இன்னமும் போரை நிறுத்தவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்கா கூட, முக்கிய வெடி குண்டுகளை இனி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டது. அதாவது, இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுதங்களில் 907 கிலோ மற்றும் 226 கிலோ கொண்ட வெடி குண்டுகளை அமெரிக்கா நிறுத்தியிருக்கிறது.
எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ராஃபாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். காசா உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன மக்கள் ராஃபா நோக்கிதான் நகர்ந்தனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக அறிவித்திருக்கிறது. அப்படி தாக்குதல் நடத்தினால் உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்று சர்வதேச நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
எனவே பெயருக்கு சில முன்னெச்சரிக்கை சில அறிவிப்புகளை இஸ்ரேல் வெளியிட்டிருந்தது. அதாவது, ராஃபா எல்லையிலிருந்து மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஆனால் தற்போது வரை வெறும் 3 லட்சம் மக்கள் மட்டுமே வெளியேறியுள்ளனர். எனவே, மீதமிருக்கும் லட்சக்கணக்கான மக்களின் நிலை என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications