"இந்திய ராக்கெட்!" கீழே விழுந்த அந்த பொருள்! ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கியதால் பரபரப்பு! என்னாச்சு
சிட்னி: கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா கடற்கரையில் மர்மப் பொருள் கரையொதுங்கிய நிலையில், அது என்ன என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்றில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மர்மப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மர்மப் பொருள் கண்டறியப்பட்டது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மர்ம பொருள் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஜூரியன் விரிகுடாவிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இது குறித்துப் பல தகவல்கள் வெளியான நிலையில், இது உண்மையில் என்ன பொருள் என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

மர்மப் பொருள்: ஆஸ்திரேலியா நாட்டில் அமைந்துள்ள முக்கிய நகரமான பெர்த்தில் இருந்து வடக்கே 250 கிமீ தொலைவில் உள்ளது கிரீன் ஹெட் கடற்கரை. இந்த கடற்கரையில் தான் ஜூலை மூன்றாவது வாரம் இந்த மர்மப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கரையின் அருகில் கடலில் மிதந்து வந்த இந்த பொருளை அங்கு வாக்கிங் சென்ற தம்பதி தான் இந்த மர்மப் பொருளை முதலில் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் தான் அங்கிருந்த பீச் வாகனத்தின் உதவியுடன் அதை வெளியே எடுத்துள்ளனர்.
அப்போது இது என்ன பொருள் என்பது யாருக்கும் தெரியவில்லை. பலரும் இது குறித்த போட்டோ மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தனர். இணையத்தில் ஒவ்வொருவரும் இது குறித்து தாங்கள் நினைத்ததைப் பதிவிட்டு வந்தனர். அப்போது தான் அந்த மர்மப் பொருள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் தெரியும் வரை யாரும் அருகில் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இணையத்தில் பரவிய கருத்துகள்: அதேநேரம் இது வெளிநாட்டு விண்வெளி அமைப்பு அனுப்பிய ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறியிருந்தது. இருப்பினும், அது எந்த பொருள்.. அது எந்த நாட்டிற்குச் சொந்தமானது என்பது குறித்து தகவல்களை அப்போது அறிவிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்தனர். ஒரு தரப்பினர் இது கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூட கூறியிருந்தனர்.

சிலர் இதை ராணுவ ஆயுதமாக இருக்கலாம் என்றெல்லாம் கூட சிலர் கூறினர். இன்னும் சிலர் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370இன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் கூறினர். இதற்கான விடை இப்போது ஒரு வழியாகக் கிடைத்துவிட்டது.
இது உண்மையில் என்ன: இதற்கிடையே இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா கடற்கரையில் கரை ஒதுங்கிய அந்த மர்மப் பொருள் இந்திய ராக்கெட்டின் ஒரு பகுதி என்பது தெரிய வந்துள்ளது. இது ராக்கெட் விண்ணில் பாயும் போது விழும் debris எனப்படும் ராக்கெட்டின் பயன்படுத்தப்பட்ட தேவையில்லாத பகுதி. ராக்கெட்டின் குப்பை அல்லது கழிவு என இதை நாம் குறிப்பிடலாம்.
அதாவது இது இந்தியாவின் இஸ்ரோ பயன்படுத்தும் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூன்றாவது ஸ்டேஜ் பகுதி என்பது இப்போது தெரிய வந்துள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான ராக்கெட்டாக இருக்கிறது. இதன் மூலம் நாம் இதுவரை பல சாட்டிலைட்களை அனுப்பியுள்ளோம். நேற்று கூட இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவே 7 சாட்டிலைட்களை அனுப்பி இருந்தோம்.
பிஎஸ்எல்வி ராக்கெட்: இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்ப்பபட்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மீட்டர் (ஆறு அடி) உயரம் கொண்ட இதில் பல கேபிள்களும் இருக்கிறதாம். இதற்கிடையே ஐநா ஒப்பந்தத்தின்படி இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆஸ்திரிலியாவில் இதுபோன்ற சாட்டிலைட் குப்பைகள் விழுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்தாண்டு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அனுப்பிய ராக்கெட் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஆட்டு மந்தை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications