நெல்சன் மண்டேலாவுக்கு விளையாட்டு உலகம் ஆழ்ந்த இரங்கல்!
ஜோகன்னஸ்பெர்க்: நிறவெறிக்கு எதிராகப் போராடிய தென்னாப்பிரிக்காவின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
நிறவெறிக்கு எதிரான விடுதலைப் போரில் விளையாட்டையும் கூட ஒரு ஆயுதமாக பயன்படுத்துங்கள்.. விளையாட்டின் மூலமாக உங்கள் விடுதலைப் போரின் கருத்தை தெரிவித்தால் அதுதான் இளைய சமூகத்தினரிடம் சென்றடையும் என்பார் நெல்சன் மண்டேலா. இன்று உலகம் போற்றும் மாமனிதர் நெல்சன் மண்டேலாவுக்கு ஒட்டுமொத்த விளையாட்டு உலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தற்போது இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மண்டேலாவின் மறைவால் அடுத்த போட்டிகள் நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. இதற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மண்டேலாவுக்கு அர்ப்பணம்
மண்டேலாவின் மறைவால் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படாது. இந்த போட்டியை மண்டேலாவுக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
ஐசிசி தலைவர் ஆலன் ஐசக் மற்றும் ஐசிசி தலைமை செயல் இயக்குநர் டேவிட் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நெல்சன் மண்டேலா இனவெறி எதிர்ப்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர். தலைவர், சமூகப் போராளி மற்றும் மக்களை ஒருங்கிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு என்பதை அங்கீகரித்தவர் அவர். மண்டேலா இறப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்துக்கும் வருத்தம் அளிக்கும் செய்தி என தெரிவித்துள்ளனர்.

டெண்டுல்கர்..
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், மண்டேலாவை சந்தித்தது என் வாழ்வின் உன்னதமான தருணங்களில் ஒன்று. அவர் உன்னதமான ஆதர்சபுருஷர். அவர் எப்போதும் என் மனதில் வாழ்கிறார் என்று கூறியுள்ளார்.

முகமது அலி
முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, மன்னிப்பு உன்னதமானது என்பது அவர் நமக்குக் கற்றுத் தந்த பாடம் என்று கூறியுள்ளார்.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் தலைவர் செப் பிளேட்டர் தமது இரங்கலில், மண்டேலா நம் காலத்தில் வாழ்ந்த மனிதநேயமிக்க தலைவர். நாங்கள் இருவரும் கால்பந்து ஆட்டத்தின் மூலம் மக்களை ஒருங்கிணைப்பது, நட்புறவு ஏற்படுத்துவது குறித்து பேசியுள்ளோம் என்றார்.

கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ்
நிறவெறிக்கு எதிராகப் போராடிய மண்டேலா எனக்கு உந்துசக்தியாக இருந்துள்ளார். அவரது இறப்பு வருத்தம் அளிக்கிறது என்று கோல்ஃப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டு மைதானத்தில் அஞ்சலி
ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வரும் அடிலெய்டு மைதானத்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் சில நிமிடம், மண்டேலாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல, மேற்கிந்தியத் தீவுகள் - நியூஸிலாந்து அணிகளின் வீரர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications