வெறும் 7 நிமிடத்தில் 21 கிமீ.. 300 அடி உயரம்! நேபாளத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்.. நடந்தது என்ன?
காத்மாண்டு: நேபாளத்தை கடந்த வாரம் மிக பெரிய வெள்ளம் தாக்கியது. இதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பல நூறு பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள வெள்ளத்திற்கு என்ன காரணம் என்பதை விளக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்!
நேபாளத்தில் ஏற்பட்ட மிக பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவு, அதிவேகமாக பாய்ந்த தண்ணீர் மற்றும் பாறை குப்பைகளால் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 300 அடி உயரம் கொண்ட தண்ணீர் மற்றும் குப்பைகளின் சுவர் போல உருவான வெள்ளம், இமயமலையின் குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாக மணிக்கு 105 மைல் வேகம் வரை பாய்ந்து, பல கிலோமீட்டர் தொலைவில் இருந்த முக்கிய உள்கட்டமைப்புகளையும் அடித்து சென்றது.

நேபாள வெள்ளம்
இந்த வெள்ளம் எதனால் ஏற்பட்டது என்பதை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் நேபாளத்தின புவியியல் அமைப்பு.. இந்த வெள்ளம் எப்படி ஏற்பட்டது.. ஏன் இது இவ்வளவு பெரிய பேரழிவை ஏற்படுத்தியது என்பதை மிக தெளிவான விளக்கியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
என்ன காரணம்!
நேபாளத்தில் 3,000க்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ள நிலையில், இந்த பேரழிவின் காரணமாக இருந்தது சுமார் 16,700 அடி உயரத்தில் அமைந்துள்ள யாலா பனிப்பாறை. சுமார் ஒரு மைல் அகலமான பகுதியில் ஏற்பட்ட சரிவே இந்த பேரழிவுக்கு தொடக்கமாக அமைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாலா பனிப்பாறையின் நிலை குறித்து விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து, எச்சரித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அந்த பனிப்பாறை சுமார் 33 அடி நீருக்கு சமமான பனிக்கட்டியை இழந்திருந்தது.
வெப்பநிலை மாற்றமே இந்த முறை ஏற்பட்ட திடீர் சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது ஜனவரி போன்ற குளிர்கால மாதங்களில் பனிப்பாறையின் மீது புதிய பனி படர்ந்திருக்கும். வெள்ளை நிற பனி சூரிய வெப்பத்தை பிரதிபலிப்பதால் பனிப்பாறை உருகுவது கட்டுப்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு நேபாளத்தில் கோடை வெப்பம் மிகவும் அதிகமாக இருந்ததால், அந்த புதிய பனிப்படலம் பெருமளவில் உருகியது. இதனால் அடியில் இருந்த பாறைகள் கலந்த பனிக்கட்டி வெளிப்பட்டது.
இந்த பாறை சூரிய வெப்பத்தை அதிகமாக உறிஞ்சியதால் உருகும் வேகம் மேலும் அதிகரித்தது. இதனுடன் பனிப்பாறையின் செங்குத்தான சரிவு, அதில் காணப்பட்ட பலவீனமான அமைப்பு, சிறிய நில அதிர்வுகள் ஆகியவை பனிப்பாறையை மேலும் வலுவிழக்க செய்தன.
வெறும் 7 நிமிடங்கள்
இந்த பேரழிவின் வேகம் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. காலை 10.52 மணிக்கு யாலா பனிப்பாறையின் சுமார் ஒரு மைல் அகலமான பகுதி சரிந்துள்ளது. சரிந்த பனிக்கட்டி, பாறைகள் மற்றும் தண்ணீர் அனைத்தும் வேகமாக கீழ்நோக்கிப் பாய்ந்தன. இப்படி மின்னல் வேகத்தில் அது சரிந்ததால் அந்த பனிப்பாறை, அதில் இருந்த தண்ணீர் மற்றும் குப்பை குவியல் மிக வேகமாக வெள்ளமாக மாறியது.
இமயமலையின் குறுகிய பள்ளத்தாக்குகளில் வெள்ளம் சிக்கியதால், தண்ணீர் மேல்நோக்கி எழுந்தது. இப்படி தண்ணீர் மற்றும் குப்பைகள் அதிகபட்சமாக சுமார் 300 அடி உயரம் வரை எழுந்ததாக கூறப்படுகிறது. இதை நேரில் பார்த்தவர்கள் அது ஒரு 'சுனாமி' போல இருப்பதாக விவரித்தனர். முதல் சரிவு ஏற்பட்ட 7 நிமிடங்கள் 40 வினாடிகளில், அதாவது காலை 10.59 மணிக்கு இந்தப் பேரழிவு சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 21 கிமீ பயணித்து சீனா-நேபாள எல்லை சோதனை சாவடி கட்டிடத்தை தாக்கியது. 7 நிமிடங்களில் 21 கிமீ என்றால் அந்த பேரழிவின் உக்கிரத்தை யோசித்து பாருங்கள்!
What an absolute cracker of a report...
— Mr B (@maddyb65) August 30, 2026
Just facts, no drama or exaggeration, and goosebumps at the end! 🙌
Another fact- No Indian media person can ever ever match this... pic.twitter.com/33vcMqz41f
2.5 கிமீ தாக்கிய வெள்ளம்
வெள்ளத்தின் சக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு மற்றொரு சம்பவமும் உதாரணமாக உள்ளது. பொதுவாக ஆற்றின் வளைவில் தணணீர் கரையை மோதும்போது அங்கு சற்று பெரிதாக இருக்கும். அப்படி இந்த வெள்ளம் கரையை மோதியபோது, அது சுமார் 2.4 கிமீ வரை மேல்நோக்கி தள்ளப்பட்டது. பின்னரே அது மீண்டும் நீரோட்டத்துடன் இணைந்தது.
நிற்காத பேரழிவு
சீனா- நேபாள எல்லைச் சோதனை சாவடியை தாக்கிய பிறகும் கூட வெள்ளத்தின் அழிவு நிற்கவில்லை. சுமார் 52 கிமீ தொலைவில் இருந்த திரிஷூலி பஜார் பகுதியை நோக்கி வெள்ளம் தொடர்ந்து பாய்ந்தது. இது பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 74 கிமீ தொலைவில் இருக்கும் பகுதியாகும். ஆனால், இந்த பகுதியில் நிலப்பரப்பு மலை பகுதியில் இருந்து சமவெளியாக மாற தொடங்கிய பகுதி என்பதால் வெள்ளத்தின் வேகம் குறைந்தது. ஆனாலும், தண்ணீரின் அளவும் அதனுடன் வந்த பாறைகள் மற்றும் குப்பைகளும் தொடர்ந்து பெரும் அழிவை ஏற்படுத்தின. பல பாலங்கள் உடைந்து அடித்து செல்லப்பட்டன. ஆற்றின் கரையோரத்தில் இருந்த கட்டிடங்களும் வெள்ளத்தில் சிக்கி அழிந்தன.
இவ்வளவு பெரிய பேரழிவை தொடக்கம் முதல் இறுதி வரை கேமராக்களும் பதிவு செய்திருக்கிறது. திடீர் இயற்கை நிகழ்வு என்றாலும், பல ஆண்டுகளாக வலுவிழந்து வந்த பனிப்பாறையும் அதிகரித்த கோடை வெப்பமும் இணைந்ததே இந்த பேரழிவுக்கான முக்கிய பின்னணியாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
