அடப்பாவிகளா.. சீனாவில் இது கூட உண்மை இல்லையா! நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா போல உலவ விட்ட பூங்கா
பெய்ஜிங்: சீனாவில் நாய்களுக்கு பாண்டா கரடி போல பெயிண்ட் அடித்து பொதுமக்களை ஏமாற்றிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாண்டா கரடி என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. எப்போதும் சோம்பேறித்தனமாக இருக்கும் அந்த உருவம்.. திடீரென செய்யும் குட்டி குட்டி சுட்டித்தனம் நெட்டிசன்களை கவர்ந்துவிடும்.

பாண்டா கரடி: பாண்டா என்பது உலகில் சீனாவில் மட்டுமே காணப்படும் ஒரு விலங்காகும். இதன் காரணமாகவே சீனாவுடன் நட்புறவு கொண்ட நாடுகளுக்கு மட்டுமே பாண்டாவை சீனா பரிசாகத் தரும். இது தனிக்கதை.. ஆனால் இன்று சீனாவில் உள்ள சில பூங்கா ஊழியர்கள் இந்த பாண்டா கரடிகளையும் கூட போலியாக உருவாக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அதாவது சீனாவின் தைஜௌ என்ற நகரில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் கடந்த மே 1ஆம் தேதி தான் நாய்க்கு பாண்டாவை போல பெயிண்டு அடித்து உலவ விட்டு இருக்கிறார்கள். அந்த நாய்களுக்கு பாண்டாக்களை போலக் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்துள்ளனர். நாய் சைஸ் என்ன.. பாண்டா சைஸ் என்ன.. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
சவ் சவ் நாய்கள்: இதற்காகவே அந்த பூங்கா ஊழியர்கள் சவ்- சவ் இன நாய்களைப் பிடித்து அதற்கு பெயிண்ட் அடித்துள்ளனர். சீனாவைச் சேர்ந்த சவ்- சவ் இன நாய்கள் மிகப் பெரியதாக இருக்கும். மேலும், அவற்றுக்கு ரோமங்களும் அதிகமாக இருக்கும் என்பதால் பெயிண்ட் அடித்த உடன் அது பார்க்க அப்படியே பாண்டா கரடி போலவே இருந்தது.
சீன ஊழியர்கள் இப்படி சவ் சவ் நாய்களுக்கு பாண்டா பெயிண்ட் அடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், நெட்டிசன்கள் இதை வறுத்தெடுத்து வருகிறார்கள். இது இலவசமும் இல்லை.. இதைப் பார்க்க வந்த பொதுமக்களுக்குத் தனியாக 20 யுவானை கட்டணமாகவும் வசூலித்து உள்ளனர்.

வீடியோ: முதலில் இதைப் பார்த்த பார்வையாளர்கள் இவை பாண்டா என்றே நம்பினர். இருப்பினும், அதன் நடவடிக்கையைக் கொஞ்ச நேரம் கூர்ந்து கவனித்த போது தான் அவை பாண்டா இல்லை.. சவ் சவ் நாய்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தான் பெயிண்ட் அடித்து அவர்கள் பாண்டா போல மாற்றியுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பூங்கா ஊழியர் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதாவது பொதுமக்களுக்கு ஒரு புதிய அனுபவம் தர வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவை சவ் சவ் நாய்கள் தான் என்பதை முன்கூட்டியே அறிவித்து இருந்ததாகக் கூறிய அவர், இதற்காகக் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எதையும் மறைக்கவில்லை என்பதால் இந்த சம்பவத்தைப் பார்வையாளர்களை ஏமாற்ற நடந்ததாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
வினோத விளக்கம்: பூங்கா செய்தி தொடர்பாளர் ஜம் பிரஸ்ஸு மேலும் கூறுகையில், "மக்கள் பொதுவாக தங்கள் தலைமுடிக்குச் சாயம் பூசுவார்கள். அதேபோலத் தான் இதுவும். நாங்கள் நாய்களின் நீண்ட ரோமங்களில் இயற்கையான சாயத்தைத் தான் பயன்படுத்தினோம்.. எங்கள் பூங்காவில் பாண்டா கரடிகள் இல்லை.. அதனால் மக்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்து இதைச் செய்ய விரும்புகிறோம்" என்றார்.

சீனாவில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காக்களில் இதுபோல விலங்குகளைப் போலியாக மாற்றிக் காட்டுவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டில் அவர்கள் ஹாங்ஜோ பூங்காவில் கரடிகள் உடை அணிவித்து சில மனிதர்களையே நடக்கவிட்டார்கள். அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் விமர்சனத்தைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications