ராணுவ தளபதியை விமானத்தை சுடும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வட கொரிய 'கிறுக்கு அதிபர்' கிம்!
சியோல்: வட கொரியாவின் இன்னும் ஒரு கொடூர முகத்தை உலகம் கண்டுள்ளது. அந்த நாட்டு ராணுவ தளபதிக்கு மிகவும் கொடூரமான முறையில் மரண தண்டனை கொடுத்துள்ளனர். விமானத்தை சுடும் துப்பாக்கியால் அவரை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றுள்ளது வட கொரிய ராணுவம்.
தேச துரோகம் செய்து விட்டதாக கூறி இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளது வட கொரிய அரசு. கிம் ஜோங் உன் 2011ம் ஆண்டு சர்வாதிகாரியாக வந்த பிறகு பலரும் இதுபோல கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தற்போது பாதுகாப்பு அமைச்சர் ஹியான் யோங் சோல் இணைந்துள்ளார்.

இவர் வட கொரிய ராணுவத் தலைமைத் தளபதியாகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதான சரியான குற்றச்சாட்டு என்ன என்பது தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் குடிபோதையில் அவர் இருந்ததாகவும், கிம் வந்தபோது அவரை சரியான முறையில் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார் கிம்.
கடந்த மாதம்தான் தனது அரசின் 15 மூத்த அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தார் கிம். அதன்படி அவர்களும் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு அமைச்சரைக் கொன்றுள்ளனர்.
இதற்கிடையே வட கொரியாவில் அரசு நிர்வாகிகளிடையே கிம்முக்கு மரியாதை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் சரமாரியாக பலருக்கும் மரண தண்டனை விதித்து வருகிறார் கிம் என்றும் கூறப்படுகிறது. அப்போதுதான் பயம் இருக்கும் என்பது அவரது திட்டமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications