மீண்டும் "தலைமறைவான" கிம் ஜாங் உன்.. உடல்நல பாதிப்பா? வேற பிளானா? அதிர்ந்த அண்டை நாடுகள்!
பியோங்யாங்: வடகொரியாவில் இன்னும் ஒரு சில நாட்களில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தலைமறைவாகியுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதால் இவ்வாறு தலைமறைவாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
ஆசியாவில் மிகவும் பரபரப்பான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அடிக்கடி நடத்தப்படும் அணு ஆயுத சோதனைகள், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள், அமெரிக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போன்றவையே இந்த பரபரப்புக்கு காரணம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 70க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணை என்பது கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை அழிக்க உருவாக்கப்பட்டவை.
இது மற்ற ஏவுகணைகளை போல வானத்தில் பறக்காமல் வான்பரப்பை விடு விண்வெளிக்கு சென்றுவிடும். இதனால் ரேடாரில் கண்களில் சிக்காது. பின்னர் இலக்குக்கு நேரே விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி பாயும். இதனை ஒரு முறை ஆன் செய்துவிட்டால் ஆஃப் செய்ய இயலாது. இவ்வளவு ஆபத்தான ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதனை செய்து வருவது தென் கொரியா மற்றும், அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு
ஆனால் வடகொரியாவின் குற்றச்சாட்டே வேறு. அதாவது தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தொடர் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால்தான் நாங்கள் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளோம் என்று வடகொரியா கூறியிருக்கிறது. இந்த பிரச்னை இப்படி இருக்க மறுபுறம் அதிபர் கிம் ஜாங் உன் தலைமறைவாவதும், பின்னர் திடீரென ஒருநாள் டிவியில் தோன்றி பேட்டியளிப்பதும் தொடர்கதையாகியுள்ளது. முன்னதாக கடந்த 2014ம் ஆண்டு 40 நாட்கள் தலைமறைவாக இருந்திருக்கிறார். பின்னர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மக்கள் முன் தோன்றி உரையாற்றியுள்ளார்.

தலைமறைவு
அந்த வகையில் தற்போது மீண்டும் தலைமறைவாகியுள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் பெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ள நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளது பேசு பொருளாகியுள்ளது. புதன் கிழமையான நாளை வடகொரியா ராணுவத்தின் 75வது ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. இது பியோங்யாங்கில் கோலாகலமாக கொண்டாடப்படும். ராணுவ வீரர்களின் அணிவகுப்பும், ஆயுதங்களின் அணிவகுப்பும் அண்டை நாடுகளையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருக்கும். இந்நிலையில் அதிபர் தலைமறைவாகியுள்ளது பேசு பொருளாகியிருக்கிறது.

அணு ஆயுதங்கள்
இதனை தென்கொரியாவிலிருந்து இயங்கும் செய்தி ஊடகமான NK உறுதி செய்திருக்கிறது. மேலும், "அணு ஆயுதங்களின் உற்பத்தி மற்றும் சோதனைக்காக கிம் தலைமறைவாக இருக்கிறார். ராணுவ அணி வகுப்பின் போது புதிய அணு ஆயுதத்தை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் உரையாற்றுவார். அப்படியில்லையெனில் உடல் நலக்குறைவு காரணமாகவும் அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது" என கூறியுள்ளது. எப்படி இருப்பினும் கிம் மீண்டும் பொதுவெளியில் முகம் காட்டும் போது புதிய திட்டங்களுடன் வருவார் என்று இதர கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆயுத உற்பத்தி
வடகொரியா கடந்த சில ஆண்டுகளாகவே ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருவதால் நாட்டின் வருவாய் பெரும்பாலும் அதற்காகவே செலவிடப்படுவதாகவும், மீதமுள்ள பணம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த போதாததால் அந்நாட்டு மக்கள் வறுமையிலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கியுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல வடகொரிய அரசை சர்வாதிகார அரசு என்றும் விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications