வெள்ளைக் கொடி காட்டிய பாக்., விடாப்பிடியாய் இந்தியா! சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்தானது ரத்தானது தான்
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, நிறுத்தி வைத்தது தான் என இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிடம் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது அந்த ஒப்பந்தத்திலேயே இருப்பதாகவும் ஆபரேஷன் சிந்து நடவடிக்கையும் தொடர்வதால் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டுவரும் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அட்டாரி வாகா எல்லை மூடப்பட்டது, பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தொடர்ந்து பாகிஸ்தான் தனது வான் பரப்பையும் மூடிய நிலையில், இரு நாடுகள் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் இரவு நேரங்களில் இந்திய பகுதிகளை குறி வைத்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்த நிலையில் இந்தியா அதற்கு பதில் தாக்குதல் நடத்தியது.

மேலும் பாகிஸ்தானின் முக்கிய பகுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் போர் விமானங்கள், ராணுவ நிலைகள் ஆகியவை தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில் இரு தரப்பும் அதற்கு ஒப்புக்கொண்டது. தொடர்ந்து நேற்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தனது வான் பரப்பை திறந்து விட்டாலும் தாக்குதல் நடத்திய இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பின்வாங்க போவதில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது நிறுத்தி வைத்தது தான் என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது ராணுவ நடவடிக்கைகளுக்கான மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தைகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது விலக்கிக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் இந்தியாவிடம் நல்லொழுக்கம், நல்லெண்ணத்தில் அடிப்படையில் நடந்து கொண்டால் மட்டுமே இந்த ஒப்பந்தம் தொடரும் என்பது ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், தற்போது அதனை மீறிய நிலையில் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை விலக்கிக் கொள்ளும் வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் தாக்குதல் நடவடிக்கை போன்ற இயக்கங்கள் மட்டும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவை மூலம் அத்துமீறினால் ஆபரேஷன் சிந்து செயல்பாட்டுக்கு வந்துவிடும். இயக்க ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்படும். நாளை நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு தான் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கு மேஜர் ஜெனரல்களுக்கு இடையே 12 மணி அளவில் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications