ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் பலி.. அலறும் மக்கள்.. காஸாவில் உச்சம் அடைந்த இஸ்ரேல் அட்டாக்!
காசா: காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 முதல் மோதல் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசாவைச் சேர்ந்த 52,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த போரால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே, 15 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வந்த போர், அமெரிக்கா அதிபர் டொனால்ர்ட் ட்ரம்ப்பின் தலையீட்டின் காரணமாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பணயக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை, ஹமாஸ் அமைப்பினர் தொடர்ந்து விடுவித்து வந்த நிலையில் பதிலுக்கு, பாலஸ்தீன கைதிகளையும் இஸ்ரேல் தொடர்ந்து விடுவித்து வந்தது.
இதனை தொடர்ந்து இஸ்ரேல் அமைப்பினர் காசா மீது தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், தங்கள் வசம் இருந்த பிணைக் கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் ஈடன் அலெக்ஸாண்டர் என்பவரை ஹமாஸ் விடுதலை செய்தது. இந்த நிலையில் வடக்கு காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
காசாவில் உள்ள அகதிகள் முகாம், மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 84 பேர் உயிரிழள்ளனர். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் தரை, கடல் மற்றும் வான்வெளி வாயிலாக நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் பெயிட் லஹியா நகரத்தில் இன்று பல மணி நேரமாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன.
9 வீடுகள், டென்ட்கள் மற்றும் முகாம்கள் ஆகியன பலத்த சேதம் அடைந்து உள்ளன. இந்த இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். ஆனால், உயிருக்கு பயந்து அவர்களின் உறவினர்களே அவர்களை மீட்க முடியாமல் தப்பி ஓடும் நிலை அங்கு இருப்ப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் பற்றி இஸ்ரேல் அரசு கூறுகையில், காஸாவில் உள்ள கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சுமார் 150 பகுதிகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதன்மூலம் அங்கிருந்த ஏராளமான கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications