போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்கு- 10 லட்சம் பேர் ஐ.நா.வுக்கு மனு!!
ஜெனிவா: போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்கு தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை- மிகப் பெரிய போர்க்குற்றம் என்பதை பல்வேறு இயக்கங்கள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் உலகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் இந்த கோரிக்கையை முன்வைத்தால் ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர முடியும்.
இதற்கான நடவடிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டது. இது குறித்து அந்த அரசாங்கம் வெளியிட்டிருந்த அறிக்கையில், சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, நாங்கள் வலியுறுத்துகிறோம்.
சிறிலங்கா குறித்த ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 70,000 தமிழ்மக்கள் உயிரிழந்ததாக 'நம்பகமான மதிப்பீடுகள்' இருந்தன.
ஒரு உள்நாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவும் முயற்சிகள் தமிழர்களுக்கு எதிரான தீவிரமான குற்றங்களைப் புரிந்துள்ளவர்களைப் பாதுகாக்கும் இன்னொரு திசைதிருப்பும் செய்லதந்திரம் ஆகும். போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு முற்றிலும் எந்தப் பொறுப்பேதும் இல்லை என்பதால், சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலை, ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ், 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது" என்று தெரிவித்திருந்தது.

கையெழுத்து இயக்கம்..
இதனை முன்வைத்து உலகம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் இயக்கமும் நடத்தப்பட்டது. தமிழகத்தில் பேராசிரியர் சரசுவதி தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை அமைப்பு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் பல்வேறு கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் கையெழுத்திட்டனர்.

10 லட்சத்துக்கும் அதிகமானோர்...
கடந்த 15-ந் தேதிக்குள் இந்த 10 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11,00,898 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தியாவில்தான் அதிகம்..
இதில் இந்தியாவில் இருந்து 6,41,526 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது 58.27% பேர் இந்தியாவில் இருந்து கையெழுத்திட்டுள்ளனர்.

எந்தெந்த நாடுகள்
இதற்கு அடுத்ததாக இலங்கை (8.2%), இங்கிலாந்து (5.08%), மலேசியா (5.06%) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஜெர்மன், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாட்டினரும் கணிசமான அளவு இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனால் இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்களுக்கான வழக்கு விரைவில் தொடரப்படும் நிலை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications