இந்தியாவ தோற்கடிச்சு காட்டுறேன்.. இல்லைனா என் பேரை மாத்திக்கிறேன்! சவால் விட்ட ஷெபாஷ் ஷெரீப்!
இஸ்லாமாபாத்: இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தானை தான் முன்னேற்றுவேன் என்றும், இல்லை என்றால் என் பெயரையே மாற்றிக் கொள்வேன் என பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷெரிஃப் சவால் விட்டிருக்கிறார். இந்த நிலையில் நல்ல பெயராக இப்போதே தேர்ந்தெடுத்து வையுங்கள் என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து பிரிந்த நாடான பாகிஸ்தான் பல வழிகளிலும் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருந்த நிலையில் திவாலாகும் நிலைக்குச் சென்றது.

இதை அடுத்து இம்ரான் கானின் மோசமான அணுகுமுறை தான் பாகிஸ்தானின் நிலைக்கு காரணம் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து அவர் பதவி விலக வேண்டும் என நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
கடந்த 2022 நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பாகிஸ்தான் அரசை கலைத்து விட்டு தேர்தல் நடத்த இம்ரான் கான் வலியுறுத்தினார். தொடர்ந்து பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து 90 நாட்களில் தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அதே நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்பு உத்தரவையும் ரத்து செய்தது.
தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வி அடைந்தார். தொடர்ந்து பிரதமர் தேர்தல் நடைபெற்ற நிலையில் ஷெபாஷ் ஷெரிப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் வழக்கமான அரசியல் தலைவர்கள் போல இந்தியாவுடன் அவர் மோதல் போக்கையே கையாண்டு வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது இந்தியாவை விட பாகிஸ்தானை வளர்ச்சியடைய செய்யவில்லை என்றால் தனது பெயரை மாற்றிக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
பாகிஸ்தானின் டோரா காஜி கான் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே ஷெபாஷ் ஷெரீப் பேசினார். அப்போது பேசிய அவர்," பாகிஸ்தானை ஒரு சிறந்த தேசமாக மாற்றுவேன். வளர்ச்சி உள்ளிட்டவற்றில் இந்தியாவை விட பாகிஸ்தானை நான் முன்னேற்றவில்லை என்றால் என் பெயர் ஷெபாஷ் ஷெரீப் இல்லை. பாகிஸ்தானை சிறந்த நாடாக உருவாக்கி இந்தியாவை விட வளர்ச்சியில் முன்னேற்றுவேன். பாகிஸ்தானின் எதிர்காலம் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.
அதற்கான வளர்ச்சி பாதையை நோக்கி வழிநடத்துவேன். என் தலைமையின் கீழ் பிற நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கடன்களை நம்பி இருப்பதை விட தற்சார்பு, தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தும். நாட்டின் சமீபத்திய பணவீக்கத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாற்பது சதவீதமாக இருந்த பணவீக்கம் இப்போது வெறும் இரண்டு சதவீதமாக குறைந்து இருக்கிறது" என்றார்.
பொதுவாக பொதுக்கூட்டங்களில் அமைதியாக பேசும் குணம் கொண்ட ஷெபாஷ் செரீப் முதன்முறையாக ஆவேசமாக பேசியிருந்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் விமர்சனத்தை பெற்றுக் தந்திருக்கிறது. இது ஒரு நல்ல காமெடி, இப்போதே நல்ல பெயரை தேர்ந்தெடுத்து வையுங்கள், மன சமநிலை இல்லாமல் பேசுகிறார் என பல பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications