பயங்கரவாதிகளை தாக்குவதாக கூறி.. சொந்த நாட்டு மக்கள் 30 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் விமானப்படை
இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்தை அழித்து நாமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற தொணியில் பாகிஸ்தான் விமானப்படை (Pakistan Air Force) செய்த சம்பவம் ஒன்று தற்போது அந்த நாட்டுக்கே வினையாக மாறியுள்ளது. அதாவது பயங்கரவாதிகளை அழிப்பதாக நினைத்து அப்பாவி மக்கள் 30 பேரை கொன்று குவித்துள்ளது பாகிஸ்தான் விமானப்படை.. பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு உற்பத்தி ஆலையை தகர்ப்பதாக கூறி அங்குள்ள ஒரு கிராமம் ஒன்றின் மீது சீனாவிடம் வாங்கிய போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் வீசிய இந்த குண்டுகள் அப்பாவி மக்கள் மீது விழுந்ததால் குழந்தைகள், பெண்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தங்கள் நாட்டில் உள்ள ஒரு இடத்தில் கூட சரியாக தாக்குதல் நடத்த தெரியாமல் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த பாகிஸ்தான் விமானப்படை செயல் சமூக வலைத்தளத்தில் கேலிக்கும், கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது.

சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல்
பயங்கரவாதத்தை வளர்த்துவிடும் பாகிஸ்தான், அதே பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படவும் செய்கிறது. பாலுக்கும் காவல்.. பூனைக்கும் தோழன் என்று சொல்வது போல, பயங்கரவாதத்தை ஒருபக்கம் வளர்த்துவிடுவதும், இன்னொரு பக்கம் அதை அழிப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கிறேன் என்ற பெயரில் உலக நாடுகளிடம் அம்பலப்படுவதும் பாகிஸ்தானுக்கு வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில்தான் பயங்கரவாதிகளை தாக்குவதாக கூறி சொந்த நாட்டு மக்கள் மீதே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
8 குண்டுகள் வீசி தாக்குதல்
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பக்துன்வா மாகாணம் உள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாட்ரே தாரா கிராமத்தில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. சீனாவிடம் இருந்து வாங்கிய ஜேஎஃப்-17 போர் விமானங்களை கொண்டு எல்எஸ்-6 வகையைச் சேர்ந்த 8 குண்டுகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானில் இந்த தாக்குதலால் கிராமத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டது, இதில் பலர் காயமடைந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். சொந்த நாட்டு மக்களையே குண்டு வீசி கொலை செய்துவிட்ட செய்தி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. "இது என்னடா நமக்கு சோதனை..." என்பது போல உலக நாடுகளிடம் அம்பலப்பட்டு போன பாகிஸ்தானோ... இதை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என முயற்சித்து கதைகளை அவிழ்த்துவிட தொடங்கியது.
பலி எண்ணிக்கை உயரும்
பாகிஸ்தான் தாலிபான் போராளிகள் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பொருட்களை வைத்திருந்ததாகவும், இதன் காரணமாகவே இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை உயரும் என்றும், பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு போலீஸ் அதிகாரி சஃபார் கான் கூறுகையில், "பாகிஸ்தானி தாலிபான் கமாண்டர்களான அமுன் கல் மற்றும் மசூத் கான் ஆகியோர் இந்த வளாகத்திற்குள் தான் பதுங்கிடங்குகளை வைத்து உள்ளதாகவும், இந்த பகுதி வெடிகுண்டு தயாரிப்பு கிடங்காகவும் உள்ளது" எனக் கூறினார். மேலும், அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பயங்கரவாதிகள் பயன்படுத்திவிட்டதாகவும் கூறினார்.
இம்ரான் கான் கட்சியும் கடும் விமர்சனம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பிறகு வீடுகள் தரைமட்டமாக இருப்பது, படுகாயங்களுடன் குழந்தைகள் கூட கண்ணீர் விட்டு அழும் காட்சிகளும் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இம்ரான் கானின் பிடிஐ கட்சி, பாகிஸ்தான் அரசை கடுமையாக இந்த விவகாரத்தில் சாடியிருந்தது.
சொந்த நாட்டு மக்களையே பாகிஸ்தான் குறிவைத்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. மனிதாபிமானத்திற்கு எதிரான வெளிப்படையான குற்றம் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. அப்பாவி மக்கள் 30 பேர் பாகிஸ்தான் வான்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்து இதுவரை எந்த கருத்தையும் அந்த நாட்டு அரசு தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications