அடங்காத பாகிஸ்தான்.. "மாயையில் மிதக்கும் இந்தியா.." திமிராக பேசிய அசிம் முனீர்! திடீர் பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எப்போதும் இந்தியா பற்றி எதாவது சர்ச்சை கருத்தைக் கூறி பிறகு வாங்கிக்கட்டிக் கொள்வதையே வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த நாட்டை சேர்ந்த தலைவர்கள் இந்தியா பற்றி சர்ச்சை கருத்துகள் கூறுவதை வழக்கமாகவே வைத்துள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தான் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அசிம் முனீர் தேவையே இல்லாமல் இந்தியா பற்றி சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
எப்போதும் இந்தியாவைச் சீண்டுவதை பாகிஸ்தான் தனது வேலையாக வைத்திருக்கிறது. கடந்த காலங்களில் பல முறை இந்தியாவிடம் தோல்வி அடைந்தாலும் பாகிஸ்தான் தனது திமிர் பேச்சை விடுவதாகவே இல்லை. அதிலும் இப்போது அங்குப் பாதுகாப்புப் படைக்குத் தலைமை தாங்கும் அசிம் முனீர் தேவையே இல்லாமல் சில கருத்துகளைக் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அசிம் முனீர்
அசிம் முனீர் சமீபத்தில் தான் சிடிஎஃப் எனப்படும் பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த பீல்டு மார்ஷல் அசிம் முனீர், இந்தியாவுக்கு எச்சரிக்கும் வகையில் திமிராகப் பேசியுள்ளார்.. எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது எந்தவொரு ஆக்கிரமிப்பு நடந்தாலும் அதற்குப் பதிலடி மிகவும் வேகமாகவும் தீவிரமானதாகவும் இருக்கும் என்று அசிம் முனீர் தேவையில்லாமல் பேசியிருக்கிறார்.
இந்தியா குறித்து திமிர் பேச்சு
அங்கு அதிகாரிகளிடையே உரையாற்றிய முனீர், "இந்தியா இனிமேல் எந்தவொரு மாயையிலும் இருக்கக்கூடாது.. ஏனெனில் இனிமேல் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பாகிஸ்தானின் பதிலடி இன்னும் வேகமாகவும் தீவிரமாகவும் இருக்கும்" என்றார்.
பாகிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை பற்றிப் பேசிய முனீர், அது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பைப் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் முனீர் விவரித்தார். பாகிஸ்தானின் ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையை ஒருங்கிணைப்பதே இதன் நோக்கம் எனச் சொல்லப்படுகிறது.
முப்படை ஒருங்கிணைப்பு
இது தொடர்பாக முனீர் மேலும் பேசுகையில், "பாகிஸ்தான் மீதான அச்சுறுத்தல்கள் வளர்ந்து வருகிறது. இதனால் பாதுகாப்புப் படைகளை ஒருங்கிணைப்பது காலத்தின் கட்டாயம்.. பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் முப்படைகளின் சேவைகளை ஒருங்கிணைக்கும். அப்போது தான் எமர்ஜென்சி காலத்தில் துரிதமாகச் செயல்பட முடியும். அதேநேரம் அந்தப் படைகளின் தனிப்பட்ட சுயாட்சியையும் அமைப்பு ரீதியான கட்டமைப்பையும் அப்படியே இருக்கும்.
இந்தக் காலத்தில் நவீன போர் முறைகள் பல கட்ட பரிணாம வளர்ச்சியை அடைந்துவிட்டது. அதற்கேற்ப நாம் மாற வேண்டியது கட்டாயம். இதற்கு பாகிஸ்தான் மக்களும் நமக்குத் தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மேலும், போர்கள் இப்போது சைபர்ஸ்பேஸ், மின்காந்தம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் என விரிவடைந்துள்ளன.. எனவே, படைகள் போரின் அதற்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.
யார் இந்த முனீர்
ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பாகிஸ்தான் ராணுவத்தை வழிநடத்தியவர் இந்த முனீர் தான். அதில் பாகிஸ்தான் மிக மோசான தோல்வியைச் சந்தித்தது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக பாகிஸ்தானே வென்றதாகத் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். அவருக்கு ஃபீல்டு மார்ஷல் பதவி கூட தரப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இந்தப் பதிவைப் பெறும் முதல் ராணுவ தளபதி முனீர் தான். மேலும், சமீபத்தில் தான் முனீருக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையிலும் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருந்தது. இதனால் எங்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சிக்குப் போய்விடுமோ என்ற அச்சமும் சர்வதேச சமூகத்தில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications