மும்பை தாக்குதல் குற்றவாளி லக்விக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியது பாக். உயர் நீதிமன்றம்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான லக்விக்கு ஆட்கடத்தல் வழக்கில் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் மீண்டும் ஜாமீன் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவனான லக்வி, மும்பை தாக்குதல் தீவிரவாத திட்டத்துக்கு திட்டம் வகுத்து கொடுத்தவர்களில் முக்கியமானவன்.

பாகிஸ்தானில் நடந்துவரும் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட லக்வியின் ஜாமீனை பொது பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தான் அரசு ரத்து செய்தது. ஆனால் அந்த உத்தரவினை விலக்கி லக்விக்கு பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் மீண்டும் ஜாமின் வழங்கியது. அந்த ஜாமீனையும் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இதனிடையே மற்றொரு வழக்கில் லக்வியை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. கடந்த ஆறாண்டுகளுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஹம்மத் அன்வர் என்பவரை கடத்திச்சென்ற வழக்கில் அவனை மீண்டும் கைது செய்ததாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லக்வி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த திடீர் கைதை எதிர்த்து லக்வியின் வழக்கறிஞர் கடந்த 31-ந் தேதி இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
புகார்தாரர் தன்னை 6 ஆண்டுகளுக்கு முன்னர் லக்வி கடத்திச்சென்றதாக தற்போதுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரர் யார்? என்றே தெரியாத வழக்கை மையமாக வைத்து எனது கட்சிக்காரரை கைது செய்து சிறைக்காவலில் அடைத்து வைத்திருப்பது தவறு. எனவே, அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தீவிரவாதி லக்விக்கு இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீனில் லக்வி விடுதலை செய்யப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ராஜா ரிஸ்வான் அப்பாஸி தெரிவித்துள்ளார்.
எனினும், பொது பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லக்வி உடனடியாக வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications