பரிசாக கிடைத்த நெக்லஸை விற்ற இம்ரான்கான்... துவங்கிய விசாரணை... பதவி இழந்ததும் பாய்கிறதா நடவடிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்துள்ளார். இந்நிலையில் பரிசாக கிடைத்த ரூ.18 கோடி மதிப்பிலான நெக்லஸை அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை துவங்கியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்நிலையில் திடீரென்று சொந்த கட்சியின் எம்பிக்கள், கூட்டணி கட்சியினர் இம்ரான்கானுக்கு எதிராக செயல்பட துவங்கினர்.
இம்ரான்கானுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து எதிர்க்கட்சியோடு கைக்கோர்த்தனர். இதனால் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இம்ரான்கான் பதவியை இழந்தார்.

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தன. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தம்பியாவார். பதவியேற்றவுடன் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடமாட்டோம் என அவர் உறுதியளித்தார். இந்நிலையில் தான் இம்ரான்கானுக்கு குடைச்சல் கொடுக்கும் செயல்கள் துவங்கியுள்ளன.

8 பேர் கைது
அதாவது ராணுவ தளபதி கமார் ஜாவித் பாஜ்வாவை இம்ரான்கான் எதிர்த்தார். மேலும் அவருக்கு பதில் தனது ஆதரவாளை அந்த பதவியில் அமரவைக்க இம்ரான்கான் முடிவு செய்தார். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதுதான் இம்ரான்கான் ஆட்சி கலைய முழுமுதற்காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ராணுவ தலைமை தளபதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்ததாக இம்ரான்கானின் கட்சியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50 பேர் மீது சந்தேகம்
இந்த நடவடிக்கையை பெடரல் விசாரணை குழு(எப்ஐஏ) மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அந்த விசாரணை குழு கூறுகையில், ‛‛ராணுவ தலைமை தளபதி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறித்து தெக்ரீக்-இ- இன்சாப் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர். இதில் 50 பேர் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

இம்ரான்கான் குறித்து விசாரணை
மேலும் இம்ரான்கான் மீதான புகார் தொடர்பாகவும் இந்த விசாரணை குழு விசாரிக்க துவங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானில் பிரதமராக இருக்கும் ஒருவருக்கும் கிடைக்கும் பரிசு பொருட்களை அதன் பாதிவிலை கொடுத்து தனிபாதுகாப்பு அறையில் வைக்கலாம். ஆனால் இம்ரான்கான் நெக்லஸ் ஒன்றை விற்பனை செய்து கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ரூ.1 கோடியே 18 லட்சத்துக்கு...
அதாவது பாகிஸ்தான் நாட்டின் பரிசு பொருட்களுக்கான கருவூலத்துக்கு(தோஷகானா) சொந்தமான நெக்லசை இம்ரான்கான் தனது நெருக்கமான உதவியாளரான ஜூல்பி புக்காரி மூலம் லாகூரில் உள்ள நகைக்கடையில் சுமார் 180 மில்லியனுக்கு (ரூ.18 கோடி) விற்றதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து தான் பெடரல் விசாரணை குழு விசாரிக்க துவங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை ஜூல்பி புக்காரி மறுத்துள்ளார். இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications