சொந்த நாட்டு வளங்களை தாரைவார்க்கும் பாகிஸ்தான்.. உற்று பார்க்கும் அமெரிக்கா & சீனா.. என்ன மேட்டர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் இப்போது மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது அனைவருக்கும் தெரியும். எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்பது போல இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள கனிமங்களின் உரிமைகளை வெளிநாடுகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாகச் சமீபத்திய ஆண்டுகளில் அது கையை மீறிச் செல்லும் அளவுக்குச் சென்றுவிட்டது. நிலைமையைச் சமாளிக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் தனது ரேர் எர்த் மெடல் மற்றும் கனிம வளங்களை வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதிக்க ரெடியாக தயாராகி வருகிறது.

பாகிஸ்தான் எடுத்த முடிவு
அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியா, இங்கிலாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு $3 டிரில்லியன் முதல் $5 டிரில்லியன் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது பாகிஸ்தானில் உள்ளூர் மாகாண அரசுகள் கட்டுப்பாட்டில் இந்த வளங்கள் உள்ளன.. அதை பாகிஸ்தான் நடுவன் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாம். முதலீடுகளை எளிதாக்கும் வகையில், அனைத்துக் கனிம மற்றும் ரேர் எர்த் மெடல்களையும் மக்கான அரசுகள் கட்டுப்பாட்டில் இருந்து பாகிஸ்தான் நடுவன் அரசு அதிகார வரம்புக்கு மாற்றப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்ட திருத்தம்
டெண்டர், ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்பு அனுமதிகளை எளிதாக்கவே இந்த வளங்கள் மாகாண அரசுகளின் கீழ் இருந்து பாகிஸ்தான் நடுவன் அரசுக்கு மாற்றப்படுகிறது. பாகிஸ்தானின் 18வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் இயற்கை வளங்கள் மீதான அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தானின் அரசுக்குக் கீழ் கொண்டு வர அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும். இதற்கான சட்டவரைவு தற்போது பரிசீலனையில் உள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா, அமெரிக்கா
அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள வளங்களின் உரிமைகளை வெளிநாடுகளுக்குக் கொடுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த உரிமைகளைச் சீனா பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வட பலுசிஸ்தான் மற்றும் தென் கைபர் பக்துன்க்வா பகுதிகளில் சுரங்கத் திட்டங்களை மேம்படுத்தும் உரிமைகளை அமெரிக்கா பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது..
மற்ற நாடுகள்
அதேபோல பாகிஸ்தானின் ரெக்கோ டிக் சுரங்கத்தில் செம்பு- தங்கம் படிவங்கள் அதிகம் உள்ளன. உலகிலேயே பயன்படுத்தப்படாத மிக பெரிய செம்பு- தங்கப் படிவம் இந்த ரெக்கோ டிக் சுரங்கத்தில் தான் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சுரங்கத்தை சவுதி அரேபியாவுக்கு கொடுக்க பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எனப் பல சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எல்லா நாடுகளுக்கும் பாகிஸ்தான் தேவையான தகவல்களைக் கொடுத்து வருகிறதாம். எந்த நாடு அதிகத் தொகையை முதலீடு செய்யத் தயாராக இருக்கிறதோ அந்த நாட்டிற்குக் கனிமங்களை ஒதுக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு அனுமதிகளையும் விரைந்து கொடுக்க பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது.
கனிம வளங்கள்
பாகிஸ்தான் பல்வேறு வளமான கனிமங்களைக் கொண்டு இருக்கிறது. நிலக்கரி, செம்பு, தங்கம், இரும்புத் தாது, குரோமைட் என பல கனிமங்கள் அங்குள்ளன.. பாகிஸ்தான் உலகின் ஐந்தாவது பெரிய செம்பு மற்றும் தங்கப் படிவங்களையும் கொண்டுள்ளது. பலுசிஸ்தான் முதல் வடக்கில் உள்ள மலைப் பகுதிகள் வரையிலும், பஞ்சாப் சமவெளிகள் முதல் சிந்து பகுதிகள் வரையிலும் பாகிஸ்தானின் கனிம வளம் பரவிக் கிடக்கிறது.












Click it and Unblock the Notifications