பாக்.-இல் உச்சக்கட்ட குழப்பம்.. நாளை ராஜினாமா செய்யும் பிரதமர் இம்ரான் கான்? அழுத்தம் தரும் ராணுவம்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அரசியல் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஏற்கனவே இருந்த கடன் சுமையும் பாக். நாட்டின் நிதிநிலையை மோசமாகப் பாதித்துள்ளது.
இது இம்ரான் கான் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளன.

பாகிஸ்தான்
அடுத்த சில நாட்களில் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்கட்சியிலேயே இம்ரான் கான் மீதான எதிர்ப்பு அதிகரித்து வருவதால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது சிக்கல் மிகுந்ததாக மாறி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மற்றொரு பின்னடைவாக, 50க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் திடீரென மயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது இம்ரான் கான் ஆட்சியைத் தக்க வைப்பதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாயம்
மாயமாகி உள்ள 50 பேரில் 25 பேர் மத்திய மற்றும் மாகாண ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு உதவியாளர்கள் ஆவர். மீதமுள்ள நான்கு பேர் மாநில அமைச்சர்கள் என்றும், 19 பேர் சிறப்பு உதவியாளர்கள் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டில் இப்போது கூட்டணி அரசு நடைபெறுகிறது. இம்ரான் கான் அரசில் இருக்கும் சில கூட்டணிக் கட்சிகள் விலகினால், இம்ரான் கான் அரசு கவிழும் சூழல் ஏற்படும். ஏற்கனவே, சுமார் 24க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ள நிலையில், பிரதமர் பதவியைத் தக்க வைப்பதில் அவருக்குப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாக். நாடாளுமன்றம்
மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரம் ஆட்சியைத் தக்க வைக்கக் குறைந்தது 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் 28ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமே அல்லது அதற்கு மறுநாளோ இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜினாமா?
இதற்கிடையே நாளை இஸ்லாமாபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வரும் முன்னரே, பிரதமர் இம்ரான் கான் பதவி விலகலாம் எனக் கூறப்படுகிறது. இம்ரான் கான் ராஜினாமா செய்தால், பாக். நாட்டில் முன் கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்படும்.

அரசியல் குழப்பம்
குறிப்பாக அதிகாரமாக்கப் பாகிஸ்தான் ராணுவமும் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பாக். நாட்டில் இப்போது நிலவும் அரசியல் குழப்பம் நாட்டுக்கு நல்லதில்லை என்பதால் இம்ரான் கான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் கருதுகிறது. பாக். ராணுவ தலைமை பொறுப்பில் உள்ள அனைவரும் இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதால், இன்னும் சில நாட்களில் அவர் ராஜினாமா செய்யலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications