பிரதமர் மோடி வாழ்த்து! ‘பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது’உடனே பதிலளித்த பாக்.பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!
இஸ்லாமாபாத் : அமைதியை உறுதி செய்யாமல் வளர்ச்சி காண முடியாது என்று பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், " இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது" என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததை அடுத்து அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
இதனையடுத்து பாகிஸ்தானின் 20வது பிரதமராக பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் எதிர்கட்சிகளால் முன்மொழியப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

ஷெபாஸ் ஷெரீப் பேச்சு
பதவியேற்புக்கு பிறகு பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் பேசிய ஷெரீப், சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பி, காஷ்மீரி மக்களுக்கு இராஜதந்திர மற்றும் தார்மீக ஆதரவை வழங்குவதற்கான தனது நாட்டின் நிலையான நிலைப்பாட்டை முன்வைத்தார். தனது உரையில் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசிய அவர், சீனா மற்றும் அமெரிக்கா உட்பட வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவை பற்றி பேச அதிக நேரம் எடுத்து கொண்டார்.

இந்தியாவுடன் நல்லுறவு
"நாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சினைக்கு சமமான தீர்வு கிடைக்கும் வரை நிரந்தர அமைதி இருக்க முடியாது" என்று உருதுவில் பேசிய அவர், " இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள வறுமை, வேலையின்மை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நான் இந்த அறிவுரையை வழங்குகிறேன். மக்களுக்கு மருந்து, கல்வி, வர்த்தகம் அல்லது வேலைகள் இல்லை. நமக்கும் வரும் தலைமுறைகளுக்கும் நாம் ஏன் தீங்கு விளைவிக்க விரும்புகிறோம்? என்றார். மேலும் "வாருங்கள், ஐநா தீர்மானங்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படி காஷ்மீர் பிரச்சினையை முடிவு செய்வோம், இரு தரப்பிலும் வறுமையை ஒழிப்போம், வேலைகளை உருவாக்குவோம், முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வருவோம்." என பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கு பதிலளிக்கும் வகையிலும், வாழ்த்து கூறும் வகையில் ட்விட்டர் பதிவை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மியான் முகமது ஷெபாஸ் ஷெரீபுக்கு எனது வாழ்த்துகள். பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லாத பிராந்தியமாகவும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலைக்கும் பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமைதியிருந்தால் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொண்டு மக்களின் நலனையும் வளத்தையும் உறுதி செய்யலாம்." என்று பதிவிட்டுள்ளார்.

ஷெபாஸ் ஷெரீப் ட்வீட்
அமைதியை உறுதி செய்யாமல் வளர்ச்சி காண முடியாது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள நிலையில், "வாழ்த்துக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது," என்று ஷெரீப் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications