கலகக்காரர்களை காயமில்லாமல் விரட்ட... விற்பனைக்கு வந்த ‘பெப்பர் ஸ்ப்ரே’ விமானம்!
பிரிட்டோரியா: கலகக்காரர்களை காயமில்லாமல் விரட்ட மிளகுப் பொடி தூவும் ஆளில்லா விமானங்களை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒன்று.
பொதுவாக போராட்டங்கள் மற்றும் கலகங்கள் நடைபெறும் இடங்களில் அதில் ஈடுபடுபவர்களை ஒடுக்க கண்ணீர் புகைக்குண்டுகள், தடியடி, தண்ணீர் பீச்சியடித்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துவது வழக்கம். இவற்றில் பெரும்பாலும் கலகக்காரர்களுக்கும், சில சமயங்களில் போலீசாருக்கும் காயங்கள் ஏற்படுவதுண்டு.
இதனை தடுக்கும் வகையில், தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒன்று புதிய வகை ஆளில்லாத விமானங்களை சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது.

ஆளில்லாத விமானம்...
தென்னாப்பிரிக்காவில் செயல்பட்டு வருகிறது டெசர்ட் வுல்ப் என்ற நிறுவனம். இது கலகக்காரர்களை உயிருக்கு ஆபத்தில்லாமல் விரட்ட உதவும் ஒரு புதுவகையான ஆளில்லா விமானங்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

மிளகுப் பொடி ஸ்பிரே....
கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த புதிய ஆளில்லாத விமானத்தின் சிறப்பம்சம், இது வானில் பறந்தபடி மிளகுப் பொடியை ஸ்பிரே செய்வது தான்.

புதிய ஆர்டர்கள்...
அறிமுகமான உடனேயே 25 புதிய விமானங்களுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளார் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹென்னி கீசர். ஆனால், இப்புதிய விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் யார் என்ற விபரத்தை வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது.

சுரங்கத் தொழில் நிறுவனங்கள்....
ஆனபோதும், சர்வதேச சுரங்கத் தொழில் நிறுவனமே இவற்றை ஆர்டர் செய்ததாக மட்டும் கூறியுள்ள அவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள சில சுரங்கத்தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள், பிற நாடுகளைச் சேர்ந்த காவல்துறை நிறுவனங்கள், தொழில்துறை வாடிக்கையாளர்கள் போன்றோரும் இதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

சித்ரவதையின் ஒரு வடிவம்...
ஆனால், இந்த புதிய விமானங்கள் குறித்த தகவலறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளது சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு. மேலும், தொழிலாளிகளின் மீது மிளகு ஸ்பிரேயைப் பயன்படுத்துவது என்பது சித்ரவதையின் ஒரு வடிவம் என அது குற்றம் சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications