பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி.. பாரிஸ் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!
பாரிஸ்: இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்துள்ளார். பிரான்ஸ் நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. AI உச்சி மாநாட்டை தலைமை தாங்குவதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார் மோடி.
இதற்காக பிரதமர் நேற்று (பிப்ரவரி 11) டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றார். பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் ஆயுதப்படை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு பாரிஸில் வரவேற்றுள்ளர்.

இதையடுத்து, பாரிஸில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை இந்திய புலம்பெயர்ந்தோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இசைக்கலைஞர்கள் குழு பாரம்பரிய இந்திய இசைக்கருவிகளை வாசித்து வரவேற்பு கொடுத்தனர்.
பிரான்ஸ் சென்றடைந்தது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "சற்று நேரத்திற்கு முன்பு பாரிஸில் தரையிறங்கினேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ), தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்ற எதிர்காலத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்தப் பயணத்தை எதிர்நோக்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை பாரீஸ் நகரில் சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். பிரதமருக்கு எலிசீ அரண்மனையில் இரவு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஏ.ஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த உச்சி மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மார்செய்லே நகரில் முதன்முறையாக இந்திய தூதரக தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி இருவரும் மார்செய்லே நகருக்கு செல்கின்றனர். அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சர்வதேச வெப்பஅணுக்கரு உலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று அதனை நேரில் பார்வையிடுகின்றனர்.
மேலும், முதலாம் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் கலந்து கொண்டு உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக மஜார்குவெஸ் நகரில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் போர்களில் பங்கேற்று வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
ஒதனை அடுத்து , அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அழைப்பையேற்று, பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்ல இருக்கிறார். அமெரிக்காவில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.












Click it and Unblock the Notifications