கேதார்நாத்தில் கவனத்தை ஈர்த்த பிரதமரின் ஆடை.. கொடுத்த வாக்கை காப்பாற்றிய மோடி!.. பின்னணி!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில் பிரதமர் மோடி மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு கேதார்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருந்தார்.
அந்த பாரம்பரிய உடையானது அவருக்கு சிம்லாவை சேர்ந்த பெண் ஒருவர் பரிசாக கொடுத்திருந்தார். வெள்ளை நிறத்தினால் ஆன ஆடையில் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடையின் பின்புறத்தில் சுவஸ்திக் போடப்பட்டிருந்தது. இது சம்பா பகுதி மக்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அதன் ஒரு பகுதியாக நேற்று கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது அவர் பாரம்பரிய உடை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த பாரம்பரிய உடை மற்றும் தொப்பி, இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா அருகே சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிசாக கொடுத்தது.

உடை
இந்த உடையானது அந்த பெண்ணே வடிவமைத்திருந்தார். இதை பிரதமர் நரேந்திர மோடி ஹிமாச்சல பிரதேசத்திற்கு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க சென்றிருந்த போது கடந்த 13 ஆம் தேதி அந்த பெண் பரிசாக கொடுத்தார். அந்த பெண்ணிடம் அந்த ஆடையை பெற்ற பிரதமர் மோடி அவருக்கு ஒரு வாக்கை கொடுத்தார். அதாவது குளிர்பிரதேசங்களுக்கு செல்லும் போது கட்டாயம் இந்த ஆடையை அணிவேன் என கூறியிருந்தார்.

கேதார்நாத்
அதன்படி நேற்று கேதார்நாத் பயணம் செய்திருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்த உடையை அணிந்து, தனது வாக்கை காப்பாற்றியுள்ளார். அந்த உடையின் பெயர் சோலா டோரா ஆகும். பிரதமர் நரேந்திர மோடி எந்த பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கேற்ப அந்த பகுதி மக்களின் ஆடையை அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

73ஆவது குடியரசு தினத்தன்று
கடந்த 73 ஆவது ஆண்டு குடியரசுத் தினத்தன்று உத்தரகாண்டின் பாரம்பரிய தொப்பியை அணிந்திருந்தார். இவரை தொடர்ந்து அந்த பகுதியின் ஏராளமான அரசியல்வாதிகள் அந்த பாரம்பரிய தொப்பியை வாங்கி அணிந்தனர். ஒரு முறை நடிகர் அக்ஷய் குமாருக்கு அந்த பாரம்பரிய தொப்பியை வழங்கினார்.

செஸ் விளையாட்டு
அது போல் தமிழகத்திற்கு சர்வதேச செஸ் விளையாட்டு விழாவுக்கு வந்திருந்த போது தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்திருந்தார். அது போல் 2019ஆம் ஆண்டு மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்த போதும் அவர் வேட்டியையே அணிந்திருந்தார். பாரம்பரிய உடையை அணிவது போல் அந்தந்த மக்களின் பாரம்பரிய வாத்தியங்களையும் இசைப்பார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications