பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்.. தலையை காட்டாத ஷெபாஸ் ஷெரீப்! பிரச்சனை என்ன?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. இன்று அவாமி செயல் குழு நடத்திய பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள் அப்பகுதியை உலுக்கின. இதனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிருப்தியடைந்துள்ளார்.
கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டங்கள் காலவரையற்றதாக இருக்கலாம் என்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அரசு, பாதுகாப்புப் படையினரை பெருமளவில் குவித்து, போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதை தடுக்க நள்ளிரவு முதல் இன்டர்நெட் சேவையை துண்டித்துள்ளது.

போராட்டங்கள் ஏன்?
சமீப மாதங்களாக பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள சிவில் சமூகக் கூட்டமைப்பான அவாமி செயல் குழு, போராட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டியுள்ளது. பல பத்தாண்டுகளாக அரசியல் தங்களை புறக்கணித்துள்ளதாகவும், இதனால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இக்குழுவின் 38 அம்ச கோரிக்கை சாசனம், கட்டமைப்பு சீர்திருத்தங்களை வலியுறுத்துகிறது. இதில், பாகிஸ்தானில் வாழும் காஷ்மீர் அகதிகளுக்காக PoK சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட 12 இடங்களை நீக்க வேண்டும் என்பதும் அடங்கும். இது பிரதிநிதித்துவ நிர்வாகத்தை குறைந்து மதிப்பிடுவதாக உள்ளூர் மக்கள் வாதிடுகின்றனர். மேலும், மானிய விலையில் உணவு, நியாயமான மின் கட்டணங்கள் மற்றும் பாகிஸ்தானால் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் போன்றவையும் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை
முசாஃபராபாத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் இக்குழுவின் தலைவர் ஷவ்கத் நவாஸ் மிர் பேசுகையில், "நம்முடைய போராட்டம் எந்த ஒரு நிறுவனத்திற்கும் எதிரானது அல்ல. மாறாக, 70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்காகவே. இதுவரை அரசு செய்ததெல்லாம் போதும். உரிமைகளை வழங்குங்கள் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
இந்த போராட்டத்திற்கு ராணுவ மொழியில் பாக் அரசு பதில் கொடுத்திருக்கிறது. ஆயுதம் ஏந்திய படைகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய நகரங்களில் அணிவகுப்பு நடத்தியுள்ளன. ஆயிரக்கணக்கான துருப்புக்கள் பாகிஸ்தான் பஞ்சாபில் இருந்து கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளன.
கேள்விக்கு உள்ளாகும் சட்டம் ஒழுங்கு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், முக்கிய நகரங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை போலீசார் மூடினர். பதற்றமான இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. உள்ளூர் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்த இஸ்லாமாபாத்திலிருந்து கூடுதலாக 1,000 போலீஸ் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரின் அணிவகுப்பு மிகவும் முக்கியமானது என்றும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க அவசியம் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
"அமைதி என்பது குடிமக்கள் மற்றும் நிர்வாகத்தின் கூட்டுப் பொறுப்பு," என்று மாவட்ட மாஜிஸ்திரேட் முடசர் ஃபாரூக் கூறியிருக்கிறார். பொதுமக்களுக்கு எவ்வித இடையூறையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மக்களின் மனித நேயம்
போராட்டக்குழுவின் பேச்சுவார்த்தையாளர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு நிர்வாகம் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த பெரிய அளவிலான படை குவிப்பு நடந்துள்ளது. முசாஃபராபாத்தில் உள்ள வர்த்தக சங்கங்கள், கடையடைப்புக்கு முன்னதாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மக்கள் சேமித்துக்கொள்ள வசதியாக ஞாயிற்றுக்கிழமை கடைகளைத் திறந்திருக்கப் போவதாக அறிவித்தன. சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள், பாதுகாப்புப் படைகளின் வாகனங்கள் நகரத்திற்குள் நுழைவதைக் காட்டுகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.
போராட்டக்குழுவின் தலைவர்கள், போராட்டம் அமைதியாகவும், சமரசமின்றி தொடரும் என்றும் வலியுறுத்துகின்றனர். இன்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், திங்கள்கிழமை நிகழ்ந்த மோதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீண்டகால அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையலாம்.












Click it and Unblock the Notifications