"மூச்சு விடுவதில் சிரமம்!" ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்ட போப் பிரான்ஸ்.. தீவிர சிகிச்சை என தகவல்
ரோம்: போப்பாண்டவர் பிரான்சிசுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர் இப்போது ரோமில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 86.
கிறிஸ்தவ மதத்தின் தலைமையாக ஐரோப்பாவில் உள்ள வாடிகன் கருதப்படுகிறது. உலகின் மிகச் சிறிய நாடாக இருந்தாலும் அதுதான் கிறிஸ்தவ மதத்தின் தலைமையாகக் கருதப்படுகிறது. வாடிகன் நகரில் தான் போப் ஆண்டவர் இருப்பார்.
இதனிடையே போப் பிரான்சிசுக்கு சில உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 86 வயதான போப் பிரான்சிசுக்கு சுவாச நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
அவர் அங்கேயே தங்கியிருந்து சில நாட்கள் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. சமீப நாட்களில் போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக மூச்சுவிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டிருந்ததாக வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்துள்ளார். மூச்சுவிடுவதில் சிரமத்தை எதிர்கொண்டதை அடுத்து அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காக ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா இல்லை
அதில் அவருக்குச் சுவாச தொற்று இருப்பது உறுதியான நிலையில், அங்கேயே தங்கி மருத்துவச் சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. முதலில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே போப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

ரத்து
இதனால் அவருக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் வாடிகன் தரப்பிலேயே விளக்கம் தரப்பட்டுள்ளது. போப்பின் உடல்நிலைக்காகப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் புருனி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக போப் பிரான்சிஸின் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வாடிகன் தரப்பில் கூறப்படுகிறது.

முழங்கால் வழி
போப்பாண்டவர் கடந்த சில காலமாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் கடந்த சில மாதங்கள் அவர் சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது. இப்போது போப் ஆண்டவர் அனுமதிக்கப்பட்டுள்ள இதே ஜெமெல்லி மருத்துவமனையில் தான், கடந்த ஜூலை 2021இல் அவருக்கு டைவர்டிகுலிடிஸ் நோய்க்கான ஆப்ரேஷன் செய்யப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் அவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஜினாமா செய்வாரா
போப் பிரான்சிஸ் தனது முழங்காலில் வலி காரணமாகக் கடந்த ஆண்டு பல முறை தனது திட்டங்களை ரத்து செய்ய அல்ல குறைக்க வேண்டியிருந்தது. கடந்த ஜூலை 2022 அவர் அளித்த நேர்காணலிலும் உடல்நிலை குறித்த கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார். அடிக்கடி உடல்நிலை பாதிப்புகளைச் சந்தித்து வருவதால், அவர் ஓய்வு பெறுவரா என்றும் விவாதங்கள் எழுந்தது. ஏனென்றால், அவருக்கு முன்பு போப் ஆண்டவராக இருந்த ஜெர்மனியை சேர்ந்த பெனடிக்ட் XVI, கடந்த 2013இல் உடல்நிலை காரணம் காட்டி ராஜினாமா செய்திருந்தார்.

அவரே கூறிய விளக்கம்
போப் ஆக இருப்பவர் ராஜினாமா செய்வது அதுவே முதல்முறை. அதேபோல போப் பிரான்சிஸும் ராஜினாமா செய்வாரா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று பதவி விலகுவேன் என்றே பிரான்சிசும் கூறியிருந்தார். இருப்பினும், அவர் தொடர்ந்து உலகெங்கும் பயணித்தே வருகிறார். கடந்த மாதம் கூட ஹங்கேரி சென்று அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications