அரசு அதிகாரி முதல் சிங்கப்பூர் அதிபர் வரை உயர்ந்த எஸ்.ஆர்.நாதன் !
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசாங்க சேவையில் பல பொறுப்புகளை, வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய சிறப்புக்குரியவராகக் கருதப்படும் எஸ்.ஆர்.நாதன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
உலகத்தில் உள்ள 196 நாடுகளில் தமிழர்கள் இல்லாத நாடே இருக்காது என்றே கூறலாம். இந்தியாவை தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், கனடா போன்ற நாடுகளில் அதிகளவு தமிழர்கள் வசிக்கிறார்கள்.

சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள் தான். சிங்கப்பூரில் இதுவரை 6 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். அதில் 6 வது அதிபர் தான் எஸ்.ஆர். நாதன் எனப்படும் செல்லப்பன் ராமநாதன்.
தமிழரான எஸ்.ஆர்.நாதன் 1924 ஜுலை மாதம் மூன்றாம் தேதி சிங்கப்பூரில் பிறந்தவர். அப்பாவின் பெயர் செல்லப்பன். அம்மாவின் பெயர் அபிராமியம்மாள். அக்கா மூவர். தங்கையர் இருவர். தம்பி ஒருவர். இவரது அக்கா அமிர்தத்தின் கணவர் சிங்கப்பூரின் பிரபல ஜோதிடராக விளங்கிய, ஜோதிட சிரோன்மணி என்.பி.கே.ராஜமாணிக்கம் ஆவார்.
சிங்கப்பூர் அரசாங்க சேவையில் பல பொறுப்புகளை, வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய சிறப்புக்குரியவராகக் கருதப்படும் நாதன், 1979ல் தமது 55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர். அதன்பிறகு, ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
தமது பதவிக்காலத்தில் அவர் உருவாக்கிய அதிபர் சவால் அறநிதி அவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. பல மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டு வசதி குறைந்தோருக்கு வழங்கப் பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் மிகப்பெரிய பொருளியல் மந்தநிலையை எதிர்கொண்டபோது, முதன்முறையாக அரசாங்க இருப்பு நிதியிலிருந்து 4.9 பில்லியன் வெள்ளியைப் பயன்படுத்தி அனுமதி வழங்கியவர்.
சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு கடந்த 31.8.2012 அன்று பதவி ஓய்வுபெற்றார். தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications