10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு.. காரணம் இதுதான்
மாஸ்கோ: உக்ரைன் போர் மற்றும் கொரோனாவால் ஏராளமானவர்கள் பலியாகி வரும் நிலையில் ரஷ்யாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையோடு விருது வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
Recommended Video
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியது. தற்போது 6 மாதமாகும் இந்த போர் முடிவுக்கு வரவில்லை.
ரஷ்யா வான்வெளி, தரைவழி தாக்குதல் நடத்தி வருவதால் உக்ரைனில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பல லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறி உள்ளனர்.

போரால் ஏற்படும் உயிர் பலி
இருப்பினும் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. ரஷ்யாவின் படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவம் எதிர்த்து நிற்கிறது. நாட்டு மக்களும் உக்ரைன் ராணுவத்துடன் கைகோர்த்து ரஷ்ய படைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் உக்ரைன் மீதான போர் நினைத்தனை விட ரஷ்யாவுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு ரஷ்யாவின் படை வீரர்களும் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 50 ஆயிரம் வீரர்கள் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கொரோனாவாலும் தொடரும் பலி
இது ஒருபுறம் இருக்க கொரோனாவாலும் ரஷ்யாவில் ஏராளமான மக்கள் இறந்துள்ளனர். தற்போதும் கொரோனா பாதிப்பு உள்ளதாக கூறப்டுகிறது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் மக்கள் தொகை சரிவை சரிசெய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு
அதன்படி ரஷ்யாவில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்யாவின் பெண்களுக்கு ரூ.13 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது முறையாக 10வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், இந்த தொகையானது உரிய பெண்ணுக்கு வழங்கப்படும். மேலும் அந்த பெண்ணுக்கு சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பிற்போக்குத்தனம் என விமர்சனம்
இதற்கிடையே இந்த அறிவிப்பை பலர் விமர்சனம் செய்துள்ளனர். இது உண்மையில் மிகவும் பிற்போக்குத்தனமானது. அவநம்பிக்கையானது. மேலும் ரஷ்யா அரசு வழங்கும் ரூ.13 லட்சத்துக்காக 10 குழந்தைகள் பெற்று கொள்வது என்பது மிகவும் சிரமமானது. அதோடு ரஷ்ய நாட்டில் தற்போது பொருளாதார, சமூகம் சார்ந்த மற்றும் அரசியல் பிரச்சனைகள் உள்ளன. இந்த சூழலில் 10 குழந்தைகள் பெற்று கொள்வது என்பதை கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாது என விமர்சனம் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications